தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தற்போது குடைச்சலைக் கொடுக்க ஆரம்பித்திருப்பதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது.

சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இருப்பினும் திமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் வரத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பாமக ராமதாஸ் அணியை திமுக கூட்டணியில் இணைத்தால், விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும். எங்கள் கொள்கையில் சமரசம் கிடையாது என்று திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘‘ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம். கூட்டணி கட்டுமானம் திமுகவின் உரிமை. அந்த முடிவை எடுப்பதற்கான உரிமை, சுதந்திரம், அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. திமுக அந்த முடிவை எடுத்தால் எங்கள் நிலைப்பாட்டிற்காக கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தலுக்காக பாதையை மாற்ற முடியாது. கருத்தியலும், நம்பகத்தன்மையும் முக்கியம். எங்கள் முடிவில் சமரசம் கிடையாது. ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வந்தால் விசிக வெளியேறும். பிளவு அரசியல் சக்திகளுடன் பணியாற்ற முடியாது. சாதி, மதம் என்கிற பெயரில் வெறுப்பு அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது. மக்களிடம் நம்பத்தன்மையை இழக்க கூடாது என்று நினைக்கிறோம்.

சமூக பொறியியல் என்கிற பெயரில் பாமக வெறுப்பு அரசியல் செய்கிறது. தேர்தலுக்காக கொள்கையை மாற்ற முடியாது. எங்களுக்கு தேர்தலைவிட விசிக மீதான மக்களின் நம்பிக்கை முக்கியம். தவெக முழுமையான அரசியல் இயக்கமாக மாறவில்லை’’ என்றார்.

அன்புமணி பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். ராமதாஸ் பாமக திமுக கூட்டணியில் இணையும் என்று தகவல் வெளியான நிலையில், திருமாவளவனின் இந்த கருத்து திமுக கூட்டணியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு தே.மு.தி.க., ராமதாஸ் பா.ம.க. போன்ற கட்சிகளை இணைக்க முதல்வர் ஸ்டாலின் விரும்புவது குறிப்பிடத்தக்கது!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal