மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கை திட்டமிட்டபடி தொடரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2026- 27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘‘ பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது மற்றும் அவற்றின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ள நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

இதற்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்கு விற்பனை செயல்முறைகளும் தர்க்க ரீதியான முடிவை எட்டும் வரை அரசு உறுதியுடன் செயல்படும். அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் நோக்கம், வெறும் வருவாயை ஈட்டுவது மட்டுமல்ல; அந்த நிறுவனங்களின் மதிப்பைக் கூட்டி, தொழில்முறை மேலாண்மையை புகுத்தி, அவற்றை மேலும் திறம்படச் செயல்பட வைப்பதே எங்களின் நோக்கம். பட்டியலிடப்பட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது சந்தையில் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன.
குறிப்பாக, ஐடிபிஐ வங்கியின் பங்கு விற்பனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் தகுந்த ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஷிப்பிங் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பிற முக்கிய நிறுவனங் களின் பங்கு விற்பனை குறித்த பணிகளும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது மற்றும் நஷ்டத்தில் இயங்கும் சில அலகுகளை மூடுவது என்பது அரசின் ஒரு கூட்டு உத்தியாகும். தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத் திறனை மேம்படுத்தவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்கள், நடைபெறாத மாநிலங்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல், பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் தொடர்பான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறேன். அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்கள் தவறானவை. இந்தியப் பொருளாதாரம் மிகவும் வலுவாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட துறைகளுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன’’ இவ்வாறு அவர் கூறினார்.
