அரசியல் விமர்சகரும், பிரபல யூடியூபருமான சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. இதனால் சவுக்கு சங்கர் யூடியூபில் கடுமையாக விமர்சித்து பேசுவதற்கு ‘செக்’ வைக்கப்பட்டிருக்கிறது.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி மோசடி வழக்குகளில் போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளில் சவுக்கு சங்கர் கைதானார். வீட்டின் பூட்டை உடைத்து சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கருக்கு மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு வரும் மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமினில் வெளிவந்த சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் வழக்கம் போல பேசி வந்தார்.

இதையடுத்து மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் தொடர்ந்து யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும், சாட்சிகளை மிரட்டுவதாகவும் கூறிய போலீசார் அவரது இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று விசாரித்து சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இதில், சவுக்கு சங்கர் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், அவருக்கு கூடுதல் நிபந்தனைகளை விதித்தனர். அதாவது, தனக்கு எதிராக உள்ள வழக்குகள் குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சமூக ஊடகங்களில் எந்த வித கருத்தையும் தெரிவிக்க கூடாது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சிகளை தொடர்பு கொள்ளக் கூடாது. நிபந்தனை மீறினால் ஜாமீன் ரத்து ஆகும்” என்று உத்தரவிட்டனர். மேலும் சவுக்கு சங்கரின் உடல் நிலையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர். இந்த ஆய்வு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஒரு குழு அமைத்து நடத்தவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் யூடியூப் சேனலில் ‘சில விஷயங்கள்’ பேசுவதற்கு ‘செக்’ வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, காவல்துறை உயரதிகாரிகள் குறித்து சவுக்கு சங்கர் விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அரசியல் கட்சி சார்பாக ஒருதலை பட்சமாக பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால், சவுக்கு சங்கர் முன்பு போல யூடியூபில் பேசுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ‘செக்’ வைத்திருக்கிறது என்கிறார்கள் வழக்கை உற்று நோக்கி வருபவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal