ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் பசியாற சாப்பிடும் வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ‘அம்மா உணவகம்’ திறந்து வைத்தார். இந்த நிலையில்தான் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்காக சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் சரவணா கிச்சன் எனும் நடமாடும் மலிவு விலை உணவகத்தை மதுரையில் திறந்திருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளருமான டாக்டர் சரவணன்.

சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் சார்பில் ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் வயிறு நிறைய சாப்பிடும் வகையில் மலிவு விலை நடமாடும் உணவகத்தை டாக்டர் சரவணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நடிகர்கள் கஞ்சா கருப்பு, மதுரை முத்து உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர். அதாவது, மலிவு விலை உணவகத்தைத் தேடி ஏழை, எளிய மக்கள் செல்லவேண்டாம். அவர்களைத் தேடி இந்த மலிவு விலை உணவகம் செல்லும்.

இந்த உணவகம் குறித்து டாக்டர் சரவணன் கூறும்போது, ‘‘கூலித்தொழிலாளர்களுக்காக மலிவு விலை உணவகத்தை தொடங்கியிருக்கிறோம். பத்து ரூபாய்க்கு 3 இட்லி ஒரு டீ அல்லது 4 இட்லி வழங்கப்படும். என் குடும்பம் உணவுக்காக பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளது.

பசியின் அருமை பட்டல்தான் தெரியும். அதனால்தான் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் அந்தக் கஷ்டத்தைப் படக்கூடாது என்பதற்காக மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் காலை உணவு வழங்கப்படும். பின்னர் மாலை நேரத்திலும் உணவு வழங்கப்படும்’’ என்றார்.

ஆக மொத்தத்தில் மதுரை மாநகரின் அட்சய பாத்திரமாக மாறியிருக்கிறார் டாக்டர் சரவணன் என்பதில் சந்தேகமில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal