கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவுக்கு ஏற்பட்ட நிலைமைதான் தற்போது த.வெ.க. தலைவர் விஜய்க்கு 2026ல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. சசிகலா சிறை சென்று வந்த பிறகு அ.தி.மு.க.வில் நிலைமை தலைகீழாக மாறியது. ஆனாலும், ‘அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நான்தான்’ என சசிகலா தொடுத்த வழக்கு இன்றும் நிலுவையில் இருக்கிறது. அதன் பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. கூட்டணியில் இணைக்கச் சொல்லி ‘மேலிடம்’ வலிறுத்தியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

அதே சமயம் 2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என சசிகலா காத்திருந்தார். ஆனால், பா.ஜ.க. தயவுடன் சசிகலாவை ஆஃப் செய்தார் எடப்பாடி பழனிசாமி. காரணம், சசிகலா மீதான வழக்குகள்தான். இன்றைக்கு அதே நிலைமைதான் த.வெ.க. தலைவர் விஜய்க்கும் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பக்கம் சென்சாரில் சிக்கியிருக்கும் ‘ஜனநாயகன்’, மறுபக்கம் கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் சீரியசாகப் போய்க்கொண்டிருக்கும் சி.பி.ஐ. விசாரணை, இன்னொரு பக்கம் வருமான வரித்துறை வழக்கு என மொத்தம் விசாரணை அமைப்புகளின் பிடியில் சிக்கியிருக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய். இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பா.ஜ.க. விரும்புவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘ சார், நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தமிழக எதிர்க்கட்சிகளின் அரசியல் கூட்டணி கணக்கீடுகளில் ஒரு மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளார் என்று டெல்லி பாஜகவுக்கு உளவுத்துறை தகவல் கொடுத்திருககிறது. விஜயின் அரசியல் கருத்துகளுக்கும், அவரின் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கும், பாஜகவிற்கும் இடையே தெளிவான ஒற்றுமை இருப்பதாக பாஜக தலைமை கருதுகிறது.
திமுக தோல்விக்கு, திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒன்றிணைய வேண்டும்; வாக்குகளின் சிதறல் ஆளும் கட்சிக்கு மட்டுமே சாதகமாகும் என ‘மேலிடம்’ உறுதியாக நம்புகிறது. விஜய்யின் பொது உரைகள் திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும், அவரின் விமர்சனங்கள் அனைத்தும் திமுகவை நோக்கியே உள்ளன. இந்த பிரச்சாரத்தின் மூலம் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் த.வெ.க.வுக்கு செல்லும். பாஜக – தவெக இடையே இப்போது வரை கூட்டணி இல்லை என்றாலும், திமுக எதிர்ப்பு அரசியலில் விஜய் செல்வாக்கு என்பது எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வை விட அதிகமாக இருக்கிறது. மாநிலத்தில் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் பாஜகவின் நோக்கத்துடன் விஜயின் நிலைப்பாடு ஒத்துப்போகிறது. ஆனால், விஜய்யின் நிலைப்பாடு தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிடும்.

தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்தும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சாத்தியக்கூறுகளை பாஜக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மதச்சார்பின்மை கருத்தில் காங்கிரசுடன் இயல்பான கூட்டாளிகள் என்று தவெக கடந்த வாரம் அறிவித்த பின்னரே, பா.ஜ.கவின் முயற்சிகள் வேகம் பிடித்துள்ளன.காங்கிரஸ் உடன் தவெக கூட்டணி வைப்பதற்கு முன் தவெகவை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில்தான், ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால், தேர்தலிலேயே நிற்காதீங்கா! எங்களுக்கு ஆதரவாக மட்டும் பிரச்சாரம் செய்யுங்கள்’ என ‘டெல்லி’ விஜய்க்கு பிரஷர் போடுகிறதாம். அதாவது 2021ல் சசிகலாவுக்கு கொடுத்த அதே பிரஷர்தான்!
‘தேர்தலுக்கு இன்னும் இரண்டரை மாதம்தான் இருக்கிறது. நீங்கள் தேர்தல் பணிகளை செய்ய முடியாது. அதனால் கூட்டணிக்கு வாருங்கள்.. இல்லையென்றால் கட்சியை கலைத்துவிட்டு எங்களுக்கு பிரச்சாரம் செய்யுங்கள். தேர்தலில் நிற்காமல் திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்கு தேர்தலில் நிற்க சின்னம் கூட உறுதியாகவில்லை. அதனால் இனி சின்னத்தை மக்களிடம் வேகமாக கொண்டு செல்ல முடியாது. இதையும் மீறி நீங்கள் (த-.வெ.க.) போட்டியிட்டால் அது தி.மு.க.விற்கு பாஸிடிவாக மாறிவிடும்’ என ‘அன்பு’ எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறதாம்.
இந்த அன்பு எச்சரிக்கைக்குப் பின் கரூர் சம்பவம் இருக்கிறதாம். காரணம், கரூர் சம்பவம் தொடர்பாக காவல்துறை மீது விஜய் பழிபோட நினைத்தாலும், விஜய்க்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக சி.பி.ஐ.யிடம் இருக்கிறது. எனவே, விசாரணை அமைப்புகளின் பிடியில் விஜய் வசமாக சிக்கிக்கொண்டதால், 2026ல் தேர்தல் புறக்கணித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ என்றனர்.
த.வெ.க. தலைவர் விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
