கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான தவெக தலைவர் விஜய், நேற்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் காலை 11:30 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார். விசாரணை மாலை 6:15 மணி வரை நீடித்தது. சிபிஐயின் டிஎஸ்பி அந்தஸ்து அதிகாரி தலைமையிலான குழு, 90 கேள்விகள் அடங்கிய கையேட்டை வழங்கி விஜயிடம் விரிவான விளக்கம் பெற்றது. விஜய் அளித்த பதில்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டு, அவரிடம் கையெழுத்து பெறப்பட்டது.

விசாரணையில் முக்கிய கேள்விகளாக, கூட்டத்திற்கு திட்டமிட்ட நேரத்தை விட ஏன் தாமதமாக வந்தார்?, அன்று இரவு அவசரமாக சென்னை திரும்பியது ஏன்?, கூட்ட நெரிசலை தடுக்க என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன? உள்ளிட்ட காலவரிசை சார்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டன. விஜய் தேவையான அனைத்து விளக்கங்களையும் அளித்ததாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணை முடிந்த பிறகு, சிபிஐ அதிகாரிகள் இன்றும் தொடர்ந்து விசாரணை நடத்த விரும்பினர்.

ஆனால், தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால அவகாசம் கோரிய விஜயின் கோரிக்கையை ஏற்று, அடுத்த கட்ட விசாரணை அடுத்த வாரத்தில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் விஜய் இன்று சென்னை திரும்பியுள்ளார். தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் சிபிஐ முன் தேவையான விளக்கங்களை அளித்தார்.

விசாரணை இன்னும் முடியவில்லை. அடுத்த வாரத்தில் தேதி உறுதியான பின் மீண்டும் ஆஜராவார். ஜனநாயகன் விவகாரத்தை தொடர்ந்து விசாரணை தேதியை மாற்றி கேட்போம்” என்றார். மேலும், காவலர் எண்ணிக்கை குறித்து முதல்வர் மற்றும் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியவற்றில் முரண்பாடு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.நிர்மல் குமார் மேலும் கூறுகையில், “கரூர் விஷயத்தில் நியாயம் கிடைக்க வேண்டும்.

கூட்ட நெரிசலில் பலியானவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குளறுபடி உள்ளது, குடும்பத்தினரிடம் மிரட்டி கையெழுத்து பெறப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தாலும் எங்கள் பழைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஜனநாயகன் திரைப்படம் பிரச்சினையின்றி வெளியே வர விரும்புகிறோம். உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal