தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் விவசாயக் கடன் வாங்குவது வழக்கம். ஆனால், பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கியதால் இப்போதைக்கு பயிர்க்கடன், மாட்டுக்கடன் வழங்க முடியாது என கைவிரித்திருக்கிறது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி!

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் தமிழக அரசு வழங்கியது. தமிழக அரசின் கஜனா ஒட்டுமொத்தமாக காலியாகியிருக்கும் நிலையில், இந்தாண்டு பொங்களுக்கு அரசு பணம் கொடுக்காது என சிலர் கூறிவந்தனர். ஆனால், மக்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ரூ.3 ஆயிரம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், இந்தப் பணம் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட, தொடங்கப்பட்ட கூட்டுறவு வங்கியில் இருந்து கொடுக்கப்பட்டது என்ற அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. மேலும், இதனால், விவசாயிகளுக்கு பொங்கல் வரை பயிர்க்கடன் வழங்க முடியாத நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் இருக்கிறது.

இது பற்றி பயிர்க்கடன் கேட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்ற விவசாயிகள் சிலர் நம்மிடம், ‘‘சார், நாங்கள் தொடக்க வேளாண்மை வங்கியில் முறையாக கடன் வாங்கி செலுத்தி வருகிறோம். எங்களுக்கு கடன் வழங்க அனைத்து ஆவணங்களும் பரிசீலித்து கடன் கொடுக்கப்படும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில்தான் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று பயிர்க்கடன் கேட்டோம். ஆனால், வங்கியின் செகரெட்ரியோ, ‘இப்போதுதான் பொங்கலுக்கு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பயிர்க்கடன் கொடுக்க வைத்திருந்த பணத்தில் இருந்துதான் ரூ.3 ஆயிரம் எடுத்துக்கொடுத்தோம். பொங்கல் முடிந்து வாருங்கள். உங்களுக்கு பயிர்க்கடனுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்கிறார். பொங்கல் முடிவதற்குள் நாங்கள் இரண்டாவது போகம் நெல்சாகுபடி எப்படி செய்வதென்றே தெரியவில்லை’’ என தலையில் கைவைத்தபடி சோகத்துடன் கூறினார்கள்.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்கும் பணத்திலிருந்து பொங்கலுக்கு ரொக்கம் கொடுத்திருப்பது விவசாயிகளை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal