‘‘தமிழக முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பொருட்களுடன்,பொங்கல் பரிசு ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ.8000 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும்’’ என பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ தமிழகத்தை சுரண்டி பல்லாயிரம் கோடி கொள்ளை அடித்த ஊழல் திமுக அரசு, ஏழை மக்களுக்கு ரூ.3000 பொங்கல் பணம் பரிசு கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. மூன்று ஆண்டுகளாக நிலுவையில், தமிழக மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பொங்கல் பரிசு பணம் 5,000 சேர்த்து பொங்கல் பொருட்களின் தொகுப்புடன் 8000 ரூபாய் ரொக்கமாக பொங்கல் பரிசு பணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.
அதிமுக ஆட்சியில் 2021 இல் பொங்கல் பரிசு உடன் 2500 ரூபாய் பொங்கல் பரிசு பணம் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் 2022, 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டது. கடந்த 2024–ஆம் ஆண்டு பொங்கல் பரிசு ரொக்கப்பணம் எதுவும் வழங்கப்படாமல் தமிழக மக்களை ஏமாற்றியது.
ஆக திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 2022 முதல் தற்போதைய 2025 ஆம் ஆண்டு, பொங்கல் வரை தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு, கடந்த கால அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டபடி அளித்திருக்க வேண்டிய தொகை 10,000 ரூபாய்.
ஆனால் தமிழக மக்களுக்கு தரவேண்டிய பொங்கல் பரிசுப் பணத்தில் 2022 முதல் 2025ஆம் ஆண்டு வரை எட்டாயிரம் ரூபாய் பணத்தை திருடி, 2026ஆம் ஆண்டு மட்டும் 3000 ரூபாய் அதிகபட்ச பணத்தை அள்ளித் தருவது போல், தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிப்பதற்காக தமிழக அரசு நாடகம் ஆடுவது வெட்கக்கேடானது.
ஆக திமுக அரசு பொறுப்பேற்றவுடன், 2021 ஆம் ஆண்டு அதிமுக அரசு தமிழக மக்களுக்கு வழங்கியது போல் வழங்கி இருக்க வேண்டிய தொகையில், திமுக அரசு கொடுக்காமல் ஏமாற்றிய ஐந்தாயிரம் ரூபாயையும் தற்போதைய பொங்கல் பரிசு ரூ.3000 ரூபாயும் சேர்த்து, தமிழக மக்களுக்கு ரூ.8000 பொங்கல் பரிசை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக, நேர்மையாக அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தின் அரசு திட்டங்களில் மற்றும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய மக்கள் நல திட்டங்களில் ஊழல் செய்வது போல், தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் பரிசு பணத்தையும் நான்கு ஆண்டுகளாக ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது வருந்தத்தக்கது.
தமிழக மக்களுக்கு நியாயமாக அளிக்க வேண்டிய பொங்கல் பரிசு பணத்தை, தமிழக அரசு திருடி விட்டது என்ற கரை படிந்த அத்தியாயத்தை, திமுக திராவிட மாடல் விடியா ஆட்சி உருவாக்கி, தமிழ்நாட்டிற்கு தலை குனிவை ஏற்படுத்தக் கூடாது.
எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாயுள்ளத்துடன் 2026 பொங்கல் பரிசு தொகை ரூ.3000 ரூபாய் மற்றும்நான்காண்டுகளாக நிலுவையில் கொடுக்க வேண்டிய தொகையை ரூ.5000 ரூபாய் சேர்த்து 2026 பொங்கல் பரிசுத்தொகையை ரூ.8000 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக் கொள்கிறது’’ இவ்வாறு அதில் கூறியிருக்கிறார்.
