சமீபகாலமாகவே கருத்துக்கணிப்புகள் பொய்த்துப்போவதில்லை ஓரளவிற்கு தேர்தல் கருத்துக்கணிப்புகள் முடிவுகளும், தேர்தல் முடிவுகளும் ஒத்துப்போகிறது.

இந்த நிலையில்தான், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில், மீண்டும் திமுக தலைவர் ஸ்டாலினே முதல்வர் ஆவார் என முடிவுகள் வெளியாகியுள்ளன. முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்குத் தள்ளி விஜய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய முதல்வர் வேட்பாளருக்கான கருத்துக் கணிப்பில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தவெக தலைவர் விஜய்க்கு இரண்டாம் இடமும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 3-ஆம் இடமும், சீமானுக்கு 4-ஆம் இடமும், அண்ணாமலைக்கு 5- ஆம் இடமும் கிடைத்துள்ளது.

தவெகவால் யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்துக் கணிப்பின் முடிவில், திமுகவுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது. அடுத்ததாக விசிக, அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், தவெகவால் நாம் தமிழர் கட்சிக்கு சொற்ப அளவே பாதிப்பு ஏற்படும் என முடிவுகள் வெளியாகியுள்ளது.

புதிய வாக்காளர்களை கவரும் இளம் தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பில் விஜய்க்கு முதல் இடமும், அண்ணாமலைக்கு 2-ஆம் இடமும், உதயநிதிக்கு 3-ஆம் இடமும், சீமானுக்கு 4-ஆம் இடமும் கிடைத்துள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்புக்காக நகரங்களில் 54.8% பேரிடமும், கிராமங்களில் 41.3 சதவீதம் பேரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்துக் கணிப்பு 234 தொகுதிகளிலும் 81,375 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல் 21 முதல் 30 வயதினர் 25.6 சதவிகிதம் பேரிடமும், 46 முதல் 60 வயதினர் 23.5 சதவிகிதம் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 41.3 சதவிகிதம் பேர் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கருத்துக் கணிப்பில் 81.71 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்றும், 10.55 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்கள் என்றும், 7.75 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், விஜய்யின் அரசியல் வருகையால் யாருக்கு அதிக பாதிப்பு என்ற வகையிலும் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலிடத்தில் அதிக பாதிப்பு திமுகவுக்கு என்றும், 2வது இடத்தில் விசிகவுக்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னரே அதிமுகவுக்கு பாதிப்பு உள்ளதாகவும், நாம் தமிழர் கட்சிக்கு சொற்ப பாதிப்பு மட்டுமே ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு விஷயம் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கிறது. மற்ற அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ளது. அ.தி.மு.வை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. குறிப்பாக ஓ.பி.எஸ்., சசிகலாவை அ.தி.மு.க. இணைப்பதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு காட்டி வருகிறார். காரணம், அவர்கள் வந்தால், இவரது பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து என நினைக்கிறார். அப்போது கூட தனது பதவியை மட்டும்தான் நினைக்கிறாரே தவிர, கட்சியை நினைக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமிக்கு சுய நலன் தான் முக்கியமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்தவர்களைக்கூட கட்சியில் இணைத்து பதவி கொடுத்தார். தனக்கான ‘ஃபேஸ் வேல்யூ’ இருந்தும் அனைவரையும் அரவரணைத்துச் செல்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ‘விவசாயி’ என்ற ‘ஃபேஸ் வேல்யூ’வைத்தவிர வேறு என்ன இருக்கிறது.

ஆனால், ஒன்றை மட்டும் எடப்பாடி பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும். 2026ல் அ.தி.மு.க. தோல்வியடைந்தால், எதிர்காலம் ஒன்றே இருக்காது. மறைந்து முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி கூறும் ஒன்றை கோடி தொண்டர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றனர்.

ஆக, மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் ரத்தத்தின் ரத்தங்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal