‘களத்தில் இல்லாதவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை’ என அ.தி.மு.க.வை மறைமுறைமாக சீண்டினார் விஜய்! ‘தேர்தல் முடிவுக்கு பிறகு களத்தில் யார் இருக்கிறார்கள் என புதிதாக கட்சி ஆரம்பித்தவர்களுக்கு தெரியவரும்’ என எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
கரூர் விவகாரத்திற்கு பின் தவெகவுக்கு ஆதரவாக அதிமுக செயல்பட்டு வந்தது. சட்டசபையிலேயே தவெகவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். இதனால் அதிமுக – தவெக கூட்டணி அமையலாம் என்று கருதப்பட்டது. ஆனால் தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது.

அதேபோல் அக்டோபர் மாத இறுதியில் அதிமுக &- தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனாலும் தவெக கூட்டணிக்குள் வரும் என்று அதிமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். இதுவரை அதிமுக கூட்டணிக்குள் வருவதை விஜய் சூசகமாக கூட கூறவில்லை. இதனால் களத்திலேயே அதிமுகவினர் துவண்டு போய் இருக்கின்றனர். மறுமுனையில் விஜய் தொடர்ச்சியாக எம்ஜிஆர், ஜெயலலிதா, திமுக ஒரு தீயசக்தி என்று பேசி அதிமுகவின் வாக்குகளை கவரத் தொடங்கி இருக்கிறார்.
ஏற்கனவே புதிய வாக்காளர்கள், இளம் வாக்காளர்களை கவர முடியாமல் அதிமுக திணறி வரும் சூழலில், விஜய்யின் வருகை அதிமுகவுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவாகி நிற்கிறது. இதனை அதிமுக தாமதமாகவே உணர்ந்து கொண்டுள்ளதாக பலரும் கூறி வந்தனர். இப்படியான சூழலில் நேற்று காலை செல்லூர் ராஜூ பேசுகையில், ‘‘அதிமுக களத்தில் இல்லை என்று கூறும் விஜய்க்கு நாவடக்கம் தேவை.. நயன்தாராவுக்கு கூட கூட்டம் கூடும்’’ என்று கடுமையாக விமர்சித்தார். ஏற்கனவே கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தாலும், செல்லூர் ராஜூவின் விமர்சனம் கவனம் பெற்றுள்ளது.
தற்போது செல்லூர் ராஜூவை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். திருத்தணியில் நடந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘புதியக் கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் அதிமுகவின் பலம் தெரியாமல் பேசுகிறார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் களத்தில் யார் காணாமல் போகப்போகிறார்கள் என்பது பற்றி தெரியும்’’ என்று விமர்சித்துள்ளார். இதனால் அதிமுகவினர் இனி விஜய்யை மீதான அட்டாக்கை தீவிரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்களாக திமுகவை மட்டும் சமாளித்து வந்த விஜய், இனி அதிமுகவின் விமர்சனத்தையும் சமாளிக்க வேண்டும் நிலை உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்களிடம் பேசினோம். ‘‘சார், தமிழகத்தில் இன்றைக்கு கிளைக்கழகம் வரை வேரூன்றி இருப்பது இரண்டே கட்சிகள்தான். ஒன்று திமுக, அடுத்தது அ.தி.மு.க.! இடையில் வந்த விஜய் கூட்டம் கூடுவதை வைத்து ‘தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும்தான் போட்டி’ என்கிறார் இது முற்றிலும் தவறான ஒன்று.
விஜய்க்கு இளைஞர்கள் மட்டும்தான் கூடுகிறார்கள். ஆனால், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் கூடினார்கள். ‘மக்களோடும், கடவுளோடும் கூட்டணி’ என்றவர் யதார்த்த அரசியலை புரிந்துகொண்டு அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடித்தார். எனவே, 2026 தேர்தல் முடிவுகள் விஜய்க்கு சரியான பாடத்தைப் புகட்டும்’’ என்றனர்.
