‘2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் திமுக கொடுத்தாலும் மக்கள் ஓட்டு போட தயாராக இல்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை தவறவிட்ட ஸ்டாலினுக்கு விவசாயிகள் முடிவுரை எழுதுவார்கள்’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தன்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவரின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அ.தி.மு.க. மருத்துவரணி சார்பில் புரட்சித்தலைவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, டிரோன்கள் மூலம் நினைவு தின பதாகைகளை பறக்க செய்து, பொதுமக்களுக்கு அன்னதானத்தை கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் வழங்கி கூறியதாவது;
‘‘புரட்சித்தலைவரின் 38வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவரின் திருவுருவப்படத்தை அலங்கரித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட இயக்கத்தை கருணாநிதி கபிளீகரம் செய்தார், இதனை தொடர்ந்து அண்ணாவின் கொள்கையை காப்பாற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை புரட்சித்தலைவர் தோற்றுவித்து 11 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை செய்தார்.
புரட்சித்தலைவரின் இந்த புனித இயக்கத்தை மூன்றாம் பெரிய இயக்கமாக அம்மா உருவாக்கி காட்டினார். இதனைத் தொடர்ந்து எடப்பாடியார் இந்த இருபெரும் தலைவர்கள் வழியில் இரண்டு கோடி தொண்டர்களை உருவாக்கி யாரும் அசைக்க முடியாத எக்குக்கோட்டையாக இயக்கத்தை வழி நடத்தி வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்ற அதிர்ச்சியில் ஸ்டாலின் அரண்டு போய் உள்ளார் குறிப்பாக இதை மடைமாற்றம் செய்ய பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை ஸ்டாலின் செய்து வருகிறார்.குறிப்பாக 100 நாள் வேலை வாய்ப்பு குறித்து மத்திய அரசையும்,எடப்பாடியாரை பற்றியும் விமர்சனம் செய்து உள்ளார் .
மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125 வேலை நாட்களாக உயர்த்திற்கு எடப்பாடியார் ஆதரவை தெரிவித்துள்ளார், அதேபோல இந்த திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார், எடப்பாடியாரின் அறிக்கையை ஸ்டாலின் படித்தாரா?

இது 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 150 நாளாக உயர்த்தப்படும் என்றும்,அதேபோல 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளமும் உயர்த்தி தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை ஸ்டாலின் கொடுத்தார். ஆனால் இன்றைக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கூட சம்பளம் கொடுக்க முடியவில்லை, வேலை நாட்கள் கூட பாதி அளவு குறைந்துவிட்டது இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் வேதனைக்கு உள்ளார்கள்.
அதுமட்டுமல்ல 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம், எடப்பாடியார் நேரில் சென்று வலியுறுத்தி 2,999 கோடியை பெற்றுத் தந்தார் என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டோம் இதை மறைக்க இன்றைக்கு ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துகிறது.மக்கள் மத்தியில் இது ஒருபோதும் எடுபடாது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை தவறிட்ட உங்களுக்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.
கடந்த 2021 ஆண்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு எடப்பாடியார் யாரும் கோரிக்கை வைக்காமல் 2 கோடி 15 லட்சம் மேற்பட்ட குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினார். அதேபோல இலவச வேஷ்டி ,சேலை திட்டத்தையும் உடனுக்குடன் வழங்கினார் ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் சரிவர இலவச வேட்டி சேலை திட்டம் சரியாக வழங்கப்படவில்லை குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த பொங்கல் திருநாளில் பொங்கல் பரிசு கொடுக்காமல் மக்களுக்கு ஸ்டாலின் பட்ட நாமம் சாத்தினார்.தற்போது தமிழகத்தில் 2,27,22,582 குடும்ப அட்டைகள் உள்ளது தற்போது சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எவ்வளவு ரூபாய் கொடுக்கலாம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள். தற்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 ஆயிரம் கொடுத்தால் கூட திமுகக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் வரும் பொங்கலில் திமுகவிற்கு பொங்கலோ பொங்கல் என்று கூறி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நாட்டுக்கு வெளிச்சம் தரும் எடப்பாடியாரை முதலமைச்சராக மக்கள் அமர்த்துவார்கள்’’ என கூறினார்.
