மா.செ.க்களை நியமிப்பதில் தமிழக வெற்றிக் கழகம் தடுமாறி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதே சமயம் உழைப்பவர்களுக்கு ‘கல்தா’ கொடுப்பதாகவுத் தகவல்கள் வருகிறது!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எஞ்சிய மாவட்ட செயலாளர்களை இன்று அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு 8 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்றவருக்கு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அஜிதா ஆக்னல் கண்ணீருடன் அலுவலக வளாகத்தில் காத்திருந்தபோது, தவெக தலைவர் விஜயை சந்திக்க முயன்றார். ஆனால், அலுவலக பாதுகாப்பு ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் வளாகத்தில் தொடர்ந்து காத்திருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் ஆதரவாளர்களுடன் வந்திருந்ததால் அலுவலகத்தைச் சுற்றி பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே தவெகவில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பொறுப்புகள் இன்று அறிவிக்கப்படவுள்ளன. இந்த நியமனங்களில் சிலருக்கு பொறுப்பு கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தி, பனையூர் அலுவலகத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால் அலுவலக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நிலைமை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தவெகவில் உட்கட்சி அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அமைப்புகளை முழுமையாக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய அதிருப்தி நிகழ்வுகள் கட்சியின் உள் நிர்வாகத்தை கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.
