அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்ககீடு சுமூகமாக முடிந்துவரும் நிலையில், தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி அறிவாலயம் வட்டாரத்தில் பேசியபோது, ‘‘காங்கிரஸ் மீது ஸ்டாலின் கொஞ்சம் கோபத்தில் இருப்பதாக அறிவாலயத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. காரணம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்தது காங்கிரஸ் குழு. தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கேட்ட இடங்களின் எண்ணிக்கையையும் ஸ்டாலின் விரும்பவில்லை

இதற்கிடையே, இந்திய தேசிய காங்கிரஸின் தொழிற்துறை பிரிவுத் தலைவராகவும், அக்கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வரும் பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறியதையும் ஸ்டாலின் விரும்பவில்லை.

சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார உத்திகளை வகுப்பதில் பிரவீன் சக்கரவர்த்தி முக்கியப் பங்காற்றினார். முக்கியமாக தற்போது ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்திக்கு தகவல்களை திரட்டியதில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. குறிப்பாக, தரவு மற்றும் அரசியல் பகுப்பாய்வு தொடர்பான விஷயங்களில் ராகுல் காந்தியின் முக்கிய ஆலோசகராக அவர் கருதப்பட்டார். எனினும், கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் அவரது செயல்பாடுகள் கட்சிக்குள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளன. விஜய் சந்திப்பு காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தவெக விஜய் உடன் சந்திப்பு நடத்தி உள்ளார். அரசியல் விவகாரங்கள் தொடர்பாக இரண்டு பேரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் விஜயை பாராட்டும் விதமாக பிரவீன் சக்ரவர்த்தி போஸ்ட் செய்திருந்தார். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் சந்திப்பு நடத்தி உள்ளனர். இதில் கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்களாம். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு திடீரென ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் செய்துள்ள போஸ்ட் பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இவர் மீது காங்கிரஸ் ஆக்சன் எடுக்கவில்லை. காங்கிரசின் இந்த செயல் ஸ்டாலினை கோபப்படுத்தி உள்ளதாம். குறைந்தபட்சம் அவருக்கு கண்டனமாவது தெரிவித்து இருக்கலாம். ஆனால் அதைக்கூட செய்யவில்லை என்று காங்கிரஸ் மீது ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறாராம்.

ஏஐசிசி பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ராகுல் காந்தியின் ரைட் ஹேண்ட் போல செயல்படுகிறார். இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கம். இவர் ஏற்கனவே ஸ்டாலினை தனியாக சந்தித்துள்ளார். ஸ்டாலினுடன் தனி ஆலோசனை நடத்தி உள்ளார். இந்த ஆலோசனையில்தான் அவர் முக்கியமான சில கோரிக்கைகளை வைத்துள்ளாராம்.

கடந்த சில ஆண்டுகளில் தங்கள் கட்சி வலுப்பெற்று, செல்வாக்கு உயர்ந்துள்ளதால், திமுக கூட்டணியில் கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தினர். இம்முறை சுமார் 70 தொகுதிகளை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்; முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. கிரிஷ் சோடங்கர் இதை நேரடியாக ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். காங்கிரஸ் இவ்வளவு தொகுதிகளை கேட்டதை ஸ்டாலின் விரும்பவில்லையாம்.

கிரிஷ் சோடங்கர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநில ஆட்சியில் அதிகாரப் பங்கீடு வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரியுள்ளது. வலுவான காங்கிரஸ் கூட்டணிக்கு மேலும் மக்களை ஈர்ப்பதோடு, சமச்சீரான ஆட்சிக்கு வழிவகுக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். இது, வெறும் துணைப் பங்காளியாக இல்லாமல், முக்கிய சக்தி என்ற காங்கிரஸின் இலக்கை உணர்த்துகிறது. தவெக ஆட்சியில் பங்கு தர தயாராக இருக்கிறது என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதமாக கிரிஷ் சோடங்கர் இப்படி கேட்டு இருக்கலாம், இதனை ஸ்டாலின் ரசிக்கவில்லையாம்.

ஏற்கனவே, ‘நாங்கள் இந்தமுறை 10 தொகுதிகளை கேட்போம்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பதும் அறிவாலயத்தை அதிர வைத்திருக்கிறது’’ என்றனர்.

தி.மு.க. வலுவான கூட்டணியை வைத்திருக்கிறது என எதிர்க்கட்சிகள் உள்பட தி.மு.க.வினரே கூறிவந்த நிலையில், யார் கண் பட்டதோ..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal