2026ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துச் செய்தியோடு, பொங்கல் ‘பரிசு’ தொகுப்புக்கான அறிவிப்பையும் முதல்வர் அறிவிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினரோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். பொங்கல் பண்டிகையை இன்னும் சிறப்பாக்கக் கூடிய வகையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது.
ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களை அரசு ஆண்டு தோறும் வழங்கி வருகிறது . தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது . எனவே இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு சற்று வெயிட்டாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்திருக்கிறது.
ஏனெனில் கடந்த முறை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வந்த பொங்கல் பண்டிகையின் போது அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகையாக 2500 ரூபாயை வழங்கி ரேஷன் அட்டைதாரர்களை திக்கு முக்காட வைத்தார். இதனை அடுத்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசும் பொங்கல் பண்டிகைக்கு 1000 ரூபாயும் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பையும் வழங்கியது . ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை . அதற்கு மாற்றாக அரிசி ,சர்க்கரை , கரும்பு உள்ளிட்டவை மட்டுமே வழங்கப்பட்டன.
இந்த சூழலில் எதிர் வரக்கூடிய பொங்கல் பண்டிகைக்கு நிச்சயம் அரசு பொங்கல் பரிசு தொகையை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி இருக்கிறது . இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களின் கஷ்டங்களை போக்கவும் அவர்கள் தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடவும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் ரொக்கமும் கரும்பு, சர்க்கரை உட்பட பொங்கல் பரிசு தொகுப்பையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் .
அண்மையில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினரும் கூட தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதுவரை தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட 2500 ரூபாய் ரொக்கம் தான் அதிகபட்ச பொங்கல் பரிசு தொகப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் தான் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கூடுதலாக பயனாளிகளை சேர்த்தது.
தற்போது தமிழ்நாட்டில் 1.30 கோடியே பெண்கள் மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர். எனவே அரசுக்கு செலவு கூடி இருக்கிறது. எனவே அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டும் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்போடு 3000 ரூபாயை வழங்குவதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தலைமை செயலகத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பை அரசு வெளியிடும் என சொல்லப்படுகிறது. வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு விடும் என்பதால் அதற்கு முன்னதாக அறிவிப்பு வர வாய்ப்புள்ளது. புத்தாண்டு வாழ்த்தோடு முதலமைச்சர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகை அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கி இருக்கிறது.
