நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அநாகரிகமாக நடந்து கொண்ட விவாகரம் சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகை நிதி அகர்வாலும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியது முதலே பாதுகாப்பு தடுப்புகளை மீறி ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
அதிலும் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சூழ்ந்து கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் நிகழ்ச்சி முடிவடைந்ததும் நடிகை நிதி அகர்வால் தன்னுடைய காரை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர் அங்கிருந்து வெளியே செல்லும்போது சிலர் அவருடைய உடைய பிடித்து இழுத்து அவரை அங்கே இங்கே நகர முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தனர்.
அந்த சூழ்நிலையில் நிதி அகர்வால் சிக்கி திணறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சில பாதுகாவலர்கள் வந்து அவரை ரசிகர்களிடமிருந்து மீட்டு காரில் ஏற்றி வைத்தனர். காருக்குள் வந்த பிறகும் தனக்கு நடந்த அதிர்ச்சி சூழலில் இருந்து நிதி அகர்வால் வெளியே வர முடியாத வகையில் இருந்தார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி ஒரு நடிகையிடம் ரசிகர்கள் என்கிற போர்வையில் சிலர் இப்படி அத்துமீறி நடந்து கொள்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்து வந்தனர்.சோசியல் மீடியாவில் இந்த செய்தி பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, திட்டமிடுதலோ இல்லாததை இதற்கு காரணம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நிதி அகர்வால் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத் கூட்ட நெரிசல் விவாகாரம் தொடர்பாக தனியார் மால் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது குக்கட்பல்வி ஹவுசிங் போர்டு காவல் நிலைய காவலர்கள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
