“திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி” என தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் கர்ஜித்திருக்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், “நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் வைத்து தான் தொடங்குவார்கள். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு. விவசாயத்துக்கு கவசமாக உள்ளது காளிங்கராயன் அணை.
உங்களை நம்பி தான் வந்திருக்கிறேன், வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருப்பேன். சூழ்ச்சிக்காரர்களுக்கு தெரியாது, இது 30 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கின்ற உறவு. பெற்ற தாய் தரும் தைரியத்தை நண்பா, நண்பிகள், தோழர்கள், தோழிகள் தருகிறார்கள்.
பெரியார் பெயரை சொல்லி கொள்ளை அடிக்காதீர்கள். நமது அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜக. தவெக ஒரு பொருட்டில்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?. கொள்ளையடித்து வைத்துள்ள பணம்தான் உங்களுக்குத் துணை; ஆனால் எனக்கு இந்த மாஸ் தான் துணை. களத்தில் உள்ள எதிரிகளை மட்டும் தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க நேரமில்லை.
எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். நீட் ரத்து, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்று அடித்து விட்டார்கள். இன்றுவரை ஏதாவது செய்தார்களா? இவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான்
24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள். நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா… தவெக. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தவிர, ‘அ.தி.மு.க. தேர்தல் களத்திலேயே இல்லை… அக்கட்சி ஒரு பொருட்டே இல்லை’ என மறைமுகமாக விஜய் பேசியிருப்பதுதான் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
