எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 1 கோடி பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 14ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ம் தேதி (வெள்ளி) அன்று வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாத கணக்கின்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் என ஒரு கோடி பேர் நீக்கப்படுகின்றனர். சென்னையில் மொத்தமாக 40 லட்சம் வாக்களர்கள் உள்ள நிலையில், மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள், அதாவது 15 லட்சம் வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் நீக்கப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல் செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, காஞ்சிபுரத்தில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே SIR பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மேற்குவங்கம், கோவா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம். வாக்காளர் பட்டியலின் நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளன. பெயர் விடுபட்ட, இடம் பெயர்ந்த, போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal