அ.தி.மு.க.வின் சீனியரான கே.ஏ.செங்கோட்டையன் சமீபத்தில்தான் த.வெ.க.வில் இணைந்து தி.மு.க.விற்கும் அதிர்ச்சி கொடுத்தார். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வில் உள்ள பிரபலங்கள் அடுத்தடுத்த த.வெ.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது

தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் 50 வருட அரசியல் அனுபவம் உள்ள மூத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

அதன் பிறகு முன்னாள் எம்பி சத்தியபாமா, 2 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும், திராவிட கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் ஆகியோரும் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து திமுகவின் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறினார். இந்த நிலையில்தான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருகிறது.

அந்த வகையில் தற்போது ஜேசிடி பிரபாகரனை தமிழக வெற்றி கழகத்தில் இணைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜேசிடி பிரபாகரன் சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறியிருந்தார். அவரிடம் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவீர்களா என்று கேட்கப்பட்ட நிலையில் அந்த கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. மேலும் இவர் தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையே மலைக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும் முக்கியப் புள்ளி ஒருவர் த.வெ.க.வில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையே அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரபலங்கள் த.வெ.க.வில் இணைய விருப்பம் தெரிவித்த நிலையிலும், புஸ்ஸி ஆனந்த இணைப்புக்கு தடை போடுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal