தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் திராவிடக் (தி.மு.க., அ.தி.மு.க.) கட்சிகளில் உட்கட்சிப் பூசல் இருக்கும். ஆனால், தற்போதுதான் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியான த.வெ.க.வில் உட்கட்சி பூசல் வெடித்து வருவது விஜய்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
த.வெ.க.வைப் பொறுத்தளவில் புஸ்ஸி ஆனந்தைத் தவிர வேறு யாராலும் விஜய்யை சந்திக்க முடியவில்லை. அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையனே மனதிற்குள் (போகாத இடம்போய்) புலம்பிக் கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே பனிப்போர் வெடித்து வரும் நிலையில், தற்போது புஸ்ஸி ஆனந்த் மற்றும் அருண்ராஜ் (ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி) இடையே பனிப்போர் பாண்டிச் சேரில் வெடித்ததாம்.

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், தவெகவில் தலைவராக உள்ள நடிகர் விஜயை எளிதாக அணுக முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, கட்சி நிர்வாகிகள் மத்தியில் நீண்ட நாட்களாகவே நிலவி வருகிறது. மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள் கூட விஜயை நேரில் சந்திக்க முடியாத சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்சியில் உள்ள பிரச்சனைகள், புகார்கள், கோரிக்கைகள் நேரடியாக தலைமைக்கு செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில், விஜய்க்கு அடுத்த முக்கிய அதிகார மையமாக புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருவதாகவும், அவரே விஜயை அணுகுவதற்கான ஒரே வாயிலாக இருப்பதாகவும் கட்சிக்குள் பேசப்படுகிறது. ஆனால், புஸ்ஸி ஆனந்த் மீது புகார் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், யாரிடம் சென்று சொல்வது என்றே தெரியவில்லை என நிர்வாகிகள் பலர் மனமுடைந்து பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பே, தவெக நிர்வாகிகளுக்கும் விஜய்க்கும் இடையே புஸ்ஸி ஆனந்த் ஒரு பெரிய தடையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை, நடிகர் தாடி பாலாஜி வெளிப்படையாக கூறியிருந்தார். அந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய போதிலும், விஜய் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே கட்சி வட்டாரங்களின் ஆதங்கமாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது தவெக கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்தை சமீபமாக ஓவர்டேக் செய்து வருகிறார். இதனால் இருவருக்குமிடையேயான பனிப்போர் உச்சத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனந்தை மீறி அருண்ராஜ் நேரிடையாக விஜயை சந்தித்து பேசுவது தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேரம் பார்த்து அருண்ராஜை காக்க வைத்துவிட்டார் ஆனந்த் என தவெக வட்டாரத்தில் ஒரு விஷயம் பேசப்படுகிறது.சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த கூட்டத்திற்கு போலீசார் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்த நிலையில், ‘க்யூ ஆர்’ அடிப்படையிலான அனுமதியுடன் மட்டுமே தொண்டர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு தான் அருண்ராஜை பழிவாங்கி விட்டாராம் ஆனந்த்.
புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு சென்றபோது அருண்ராஜ் எந்த பாஸும் எடுத்து செல்லவில்லை. அவரை போலீசார் தடுத்ததால், மைதானத்திற்குள் செல்ல முடியாமல் வெளியே நின்றபடியே புஸ்ஸி ஆனந்துக்கு பலமுறை போன் செய்திருக்கிறார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. தன் செல்போன் எண்ணை பார்த்த பின்னரும் அழைப்பை தவிர்த்தது அவருக்கு தெரியவந்திருக்கிறது.
விஜய் உடன் தினமும் பேசும் தனக்கே இந்த நிலை என்றால், மற்ற நிர்வாகிகளின் நிலை என்ன?” என புலம்பியுள்ளார் அருண்ராஜ் என்கின்றனர் மா.செ.க்கள். அருண்ராஜ் இதனை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாக பேசியவதாகச் சொல்லப்படுகிறது. இது நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றனர்.
