மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வேடம் அணிந்தவர்களுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து டாக்டர் சரவணன் விருப்பமனு அளித்து, ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, மற்றக்கட்சிகளுக்கு முன்பாகவே அதிரடியாக வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கிவிடுவார். அதே போல் எடப்பாடி பழனிசாமியும் இன்று டிச.15ம் தேதி நண்பகல் 12 மணி முதல் தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்ப மணுக்களை அளிக்கலாம் என அறிவித்திருந்தார்.
அதன்படி, அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் காலை முதலே அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில்தான் மதியம் ஏராளமானோர் விருப்ப மனுவை பெற்ற போதும், மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் விருப்ப மனு அளித்ததுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேடமணிந்தவர்களுடன் வந்து விருப்பமனுவை அளித்தார். அதாவது மதுரையில் உள்ள சோழவந்தான் தொகுதியை தவிர்த்து அனைத்துத் (9) தொகுதிகளிலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்தார்.
அடுத்ததாக, மதுரை வடக்கு தொகுதியில் டாக்டர் சரவணன் போட்டியிட விருப்ப மனுவை அளித்தார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர்., ஜெ. வேடணிந்து வந்தவர்களுடன் ரத்தத்தின் ரத்தங்கள் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள்.
