மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம்(கிராமப்புறம்)’ மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் வேலைநாட்கள் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005ம் ஆண்டு, கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்ய மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக ‘ வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) ‘ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை கடந்த 12 ம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், பார்லிமென்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து, அனைத்து எம்பிக்களும் பார்லிமென்டிற்கு வர வேண்டும் என பாஜ கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதாப்படி வேலை நாட்களின் எண்ணிக்கை 100 ல் இருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பழைய திட்டத்தின்படி மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், புதிய திட்டத்தில், மாநில அரசுகளும் நிதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசுக்கும், இமயமலை மாநிலங்கள், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஜம்மு காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் நிதிப் பகிர்வு 90:10 ஆகவும், சட்டசபை கொண்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 ஆகவும் இருக்கும். சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசங்களில் ஆகும் மொத்த செலவையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1.51 லட்சம் கோடி செலவாகும் நிலையில், மத்திய அரசு ரூ.95,692 கோடி வழங்க உள்ளது.

நீர் பாதுகாப்பு, ஊரக கட்டமைப்பு, வாழ்வாதார உள்கட்டமைப்பு உள்ளிட்ட நான்கு வகைகளில் பணிகள் ஒதுக்கப்படும். அதேநேரத்தில், விவசாயப் பணிகள் உச்சத்தில் இருக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அந்த காலகட்டத்தில் இந்தப் பணிகள் துவங்கப்படவோ அல்லது செயல்படுத்தக்கூடாது. இதற்கான அறிவிப்பை 60 நாட்களுக்கு முன்னதாக மத்திய அரசு வெளியிட வேண்டும்.

பணி முடிந்த ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால் வேலையின்மைக்கான படி வழங்கப்பட வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal