மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் விருப்ப மனு கொடுத்தார்.
சமீபத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை நடத்தி முடித்த அ.தி.மு.க., அதன் தொடர்ச்சியாகச் சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.15) முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல் அதற்கான படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் தலைமை அலுவலகத்தில் வழங்கலாம்’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது.
அ.தி.மு.க.வில் ஏராளமான நிர்வாகிகள் விருப்பமனுக்களை பெற்றனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது!
