‘தமிழ்நாட்டின் இருண்ட காலம் தி.மு.க ஆட்சி. திமுக அரசு இந்திய அரசியல் சாசன சட்டப்படி கலைக்கப்பட வேண்டிய அரசு. தமிழக முதல்வர் ஸ்டாலின் “டேஷ்” அரசியல் செய்யலாமா?’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ ‘தமிழ்நாட்டின் எதிர்காலம் திமுக தான்’ என்று திருவண்ணாமலை கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நிறைவேறாத கனவை கூறி இருக்கிறார். ஊழல் திமுக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் போர்க்கொடி தூக்கி கேள்விகள் கேட்பதால் பயமும், பதட்டமும் அதிகமாகி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சவால் விடுவது போல பேசி உள்ளார்.
திமுகவின் அழிவு காலத்தில் தான் தமிழகத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக மக்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின், அமித் ஷாவுக்கு அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம்? என்று திமுக மேடையில் தேர்தல் அரசியலுக்காக கூச்சலிடுகிறார்.
பாஜக பீகார் தேர்தலில் மகத்தான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுவிட்டது. கேரளாவில் கம்யூனிஸ்டுகளை வீழ்த்தி உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. வருகின்ற இரவு 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றியை பெறப்போகிறது என்பதை நன்கு உணர்ந்து, “சங்கிப்படையையே கூட்டி வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது” என்று
நடிகர் வடிவேலு பாணியில் வெற்று வீர வசனம் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக இளைஞர்களின் வாழ்வை சீரழித்து வரும் போதை கலாச்சாரம், தமிழக பெண்களின் தாலி கயிற்றை அறுக்கும் டாஸ்மார்க் வியாபாரம், ரியல் எஸ்டேட் கொள்ளை, செம்மண், சவுடு கருங்கல் என ஒட்டுமொத்த மண்வளத்தையும் திருடி நீர் ஆதாரத்தை அழித்து வரும் கனிம குவாரி ஊழல், பள்ளிக்கரணை சதுப்புநில ஊழல், சென்னை வெள்ள நிவாரண கால்வாய் ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல், அனைத்து பொருட்களுக்கும் விலை ஏற்றம் என மோசமாக ஆட்சி செய்து வரும் திமுக அரசின் வேதனைகளை சாதனைகள் போல் துணிந்து நாடக அரசியல் செய்து வரும் முதல்வர் ஸ்டாலினின் மக்கள் விரோத தேர்தல் விளம்பர அரசியல் இனி எடுபடாது.
திமுகவிற்கு எதிரான கருத்துக்களை சொல்லும் சமூக சேவகர்கள், அரசியல்வாதிகளின் படுகொலைகள், சிறியவர் முதல் பெரியவர் வரை பெண் சமுதாயமே பயந்து அஞ்சு நடுங்கும் வகையில் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், சமூகவிரோதிகளின் ரவுடிகளின் சட்டவிரோத தொழில் கொலைகள், வன்முறைகள், காவல்துறையின் மனித உரிமை மீறல்கள், லாக்கப் படுகொலைகள் என இந்திய அரசியல் சாசன சட்டப்படி தமிழகத்தை ஆளுகின்ற தார்மீக தகுதியை திமுக அரசு இழந்துவிட்டது.
தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டிய ஆட்சி என்பதை உணராமல், திமுக அரசின் தவறுகளை, தமிழகத்திற்கு இழைத்த துரோகங்களை மறைத்து முதல்வர் ஸ்டாலின் பாஜக கட்சியையும் ஆட்சியையும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது பொய்யான அவதூறு பிரச்சாரத்தை தொடர்ந்து அரசு மேடைகளிலும் கட்சி மேடைகளிலும் பேசி வருகிறார்.
“எங்க கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே” என்று இருமாப்போடு “டேஷ்” அரசியல் பேசும் முதல்வர் ஸ்டாலின், மக்கள் விரோத பிரிவினைவாத ஊழல் அரசுகளை தொடர்ந்து வீழ்த்தி, ஒவ்வொரு மாநிலங்களிலும் மோடி அரசின் வளர்ச்சி அரசியல் ஆட்சியை அமைத்துவரும் பாஜக கட்சியின் நேர்மையான அரசியல் கேரக்டரை 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் திமுக அரசை விரட்டியடிக்கும் பொழுது புரிந்து கொள்வார்’’ என்றார்.
