ஆளும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் அசுர பலத்தில் இருக்கும்போது, எதிர்க்கட்சியான அதிமுக விருப்பமனுவை அறிவித்திருக்கிறது. இந்த நிலையில்தான் த.வெ.க.வில் வேட்பாளர்களை விஜய் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருக்கும் போதே ஓய்வு பெற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது மிகவும் ஆச்சரியமாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வேட்பாளராக அருண்ராஜ் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

முதல் கட்டமாக திருச்செங்கோட்டில் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன், அருண் ராஜ் ஆகியோர் இன்று தவெக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் அங்கு போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொகுதிக்கு 4 பேர் வீதம் விஜய் தேர்வு செய்து வைத்துள்ளாராம்.. அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய தவெக முடிவு செய்துள்ளது. சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அப்பகுதியில் பிரபலமாக இருக்க கூடிய தியேட்டர் உரிமையாளர்கள் தவெக சார்பில் போட்டியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தவிர, த.வெ.க. சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அடுத்த கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவும் விஜய் ஆயத்தமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal