பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து டெல்லிக்கு சென்று வந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று டிசம்பர் 13ம் தேதிதமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் டில்லி புறப்பட்டு சென்றார்.
அதிமுக பொதுக்குழுவில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் பழனிசாமிக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் எடப்பாடியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழக பா.ஜ.க, தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் ‘‘கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஏதும் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை’’ என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறினார். இருந்தாலும், இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டு சென்றார்.
நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்திக்கிறார். தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என தெரிகிறது. டில்லியில் அமித் ஷாவை சந்தித்த பின், நயினார் நாகேந்திரன் மீண்டும் இபிஎஸ்-ஐ சந்தித்து, இதுதொடர்பாக பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த முடிவை அதிமுக எடுக்குமென அக்கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, நயினார் நாகேந்திரன், ‘‘அகில இந்திய அளவில் தேஜ கூட்டணி, பாஜ தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக இருக்கிறார். அவர் (இபிஎஸ்) சில முடிவுகளை எடுப்பார்’’ என்றார்.
அமித் ஷா தமிழகம் வருவதற்கு முன்பு அ.தி.மு.க.வில் உள்ள பஞ்சாயத்துக்களை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையே, கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சிபிஐ எஸ்பி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தவெக பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, விஜய்க்கு டெல்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையும் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
