தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் ஆரம்பித்திருக்கிறார். இவரால் யாருக்கு (தி.மு.க, அ.தி.மு.க.) பாதிப்பு என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.

நடிகர் விஜய்க்கு சிறுபான்மையினர் வாக்குகள் அதிகளவில் சென்றுவிடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஏற்கனவே, சிறுபான்மையினர் வாக்குகள் தி.மு.க.விற்கு சென்றுகொண்டிருந்தது. காரணம், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதுதான்!

இந்த நிலையில்தான், கிறிஸ்துவ வாக்குகளை முதல்வர் ஸ்டாலினும், உதயநிதியும் குறி வைத்து காய்நகர்த்துகிறார்கள்.

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம், ‘‘சார், கிறிஸ்தவர்கள் வாக்கு வங்கி எந்த வகையிலும் விஜய் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் திமுக கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலியில் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

20-ம் தேதி காலையில் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர், மாலையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் பாளைங்கோட்டையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். இதுபோல் கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார்.

தென்மாவட்டங்களில் சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பல தொகுதிகளில் கணிசமாக உள்ளது. இதை இழந்துவிட்டால் தென்மாவட்டங்கள் தங்களது கைவிட்டுப்போய்விடும் என்பதை திமுக-வும் காங்கிரஸும் உணர்ந்திருக்கின்றன. இதனால்தான் அந்த வாக்கு வங்கியை தக்கவைப்பதற்கான செயல்திட்டங்களை திமுக முன்கூட்டியே செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு, அரசு விழாவுக்காக நெல்லை வந்திருந்த முதல்வர், சிஎஸ்ஐ கிறிஸ்தவ பேராயர், குருமார்களை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார். இதுபோல், தூத்துக்குடி அரசு விழாவுக்குச் சென்றிருந்த போதும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த பேராயர்கள், ஆயர்களை முதல்வர் சந்தித்துப் பேசினார். அடுத்ததாக இப்போது கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளில் இம்முறை விஜய் சேதாரம் உண்டாக்கலாம் என உளவுத்துறை எச்சரித்திருப்பதால் அதை சரிசெய்யும் விதமாக முதல்வரும் துணை முதல்வரும் கிறிஸ்துமஸ் விழாக்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், கிறிஸ்துமஸ் விழாக்களில் இவர்கள் பங்கேற்பதால் மட்டுமே கிறிஸ்தவ மக்களின் வாக்குகள் விஜய் பக்கம் சாயாமல் இருக்குமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தான் தெரியும்’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal