அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறை காவல்துறைக்கு வலியுறுத்தி வரும் நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் முதலீடு செய்ய, அமைச்சர் நேரு தரப்பில் நடந்த பேச்சு குறித்து, அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தி.மு.க., மூத்த நிர்வாகியான நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக உள்ளார். அவரது துறையில், பணி நியமனம் செய்ததில், 888 கோடி ரூபாயும், ‘டெண்டர்’ விவகாரத்தில், 1,020 கோடி ரூபாயும் ஊழல் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த ஊழல் விவகாரம் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில். ‘‘சமீபத்தில், அமைச்சரின் தம்பி ரவிச்சந்திரன், இத்தாலி சென்றுள்ளார். அங்கு பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக முதலீடு செய்வது தொடர்பாக சிலரை சந்தித்து பேசி உள்ளார்.

அமைச்சர் துறையில், பல கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்து தருவதாக, நான்கு கம்பெனிகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம், பணம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியாக வலம் வந்தவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அமைச்சர் கே.என்.நேரு முன்பு அமலாக்கத்துறை நடவடிக்கை தீவிரமாகிவிடும் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal