2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் பரபரப்பான தேர்தல் வியூகங்களுடன் களத்தில் இறங்கி பணிகளை தொடங்கிவிட்டனர். அதிமுகவில் ஏராளமான பிரச்சனைகள் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் தொடங்கியது.
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தற்காலிக அதிமுக அவை தலைவர் கே.பி.முனுசாமி தலைமையில் தொடங்கியுள்ளது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொதுக்குழுவிற்கு வந்த எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, ‘ தமிழக அரசியல் களத்தில் இன்றைக்கு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் வைத்துதான் அரசியல் செய்ய முடிகிறது. ஏனென்றால் அவர்கள் கொண்டுவந்த நலத்திட்டங்கள் மக்கள் மனதில் மறையாமல் இருக்கிறது. எலி வலையானாலும் சரி, பூகம்பம், புயல் வந்தாலும் 2026ல் எடப்பாடியார் முதலமைச்சர் ஆவதை தடுக்க முடியாது.
அரசியலில் எல்லோருக்கும் எதிரிகள் இருப்பதார்கள். ஆனால், எடப்பாடியாருக்கு துரோகிகளும் இருக்கிறார்கள். எனவே, துரோகிகள், எதிரிகள் அனைவரையும் வென்று 2026 ல் அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமரும், எடப்பாடியார் முதல்வராக பொறுப்பேற்பார்’’ என்றார் அதிரடியாக!
