‘‘மக்கள் பாதுகாப்பில் பாரபட்சம் பார்க்காமல் நடந்துள்ள புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்’’ புதுச்சேரியில் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று உப்பளம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். “தமிழ்நாடு மாதிரியே புதுச்சேரி மக்களும் என்னை கிட்டத்தட்ட 30 வருஷமா தாங்கிப் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க. இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான்னு நினைக்காதீங்க; புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்துத்தான் குரல் கொடுப்பான்; அது என்னுடைய கடமை“ என்று உருக்கமாகப் பேசினார்.

இது புதுச்சேரி மக்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. புதுச்சேரியின் நீண்டகால கோரிக்கையான மாநில அந்தஸ்து குறித்து விஜய் கடுமையாக விமர்சித்தார். அதனை தொடர்ந்து, “16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை. ஒரு அமைச்சர் பதவி ஏற்று 200 நாட்களாகியும் இலாகா ஒதுக்கப்படவில்லை“ என்று சாடினார். மேலும், “புதுச்சேரி டூரிஸ்ட் இடமாக இருந்தும் பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை, ரேஷன் கடைகளும் இல்லை. இவற்றை கொண்டு வர வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

திமுக அரசை விமர்சித்த விஜய், “வேறு கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் மக்கள் பாதுகாப்பில் பாரபட்சம் பார்க்காமல் நடந்துள்ள புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சர் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்’’ என்று கூறினார். இது தமிழக அரசியலில் புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

“புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கும்“ என்று உறுதியளித்த விஜய், “1977-ல் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார், ஆனால் அதற்கு முன்பே 1974-ல் புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைந்தது“ என்று வரலாற்றை நினைவூட்டினார்.

புதுச்சேரி மக்களுக்கு தமிழகத்தைப் போலவே உரிமைகள் வேண்டும் என்று வலியுறுத்தினார்.கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்திற்குப் பிறகு விஜய்யின் முதல் பொதுக்கூட்டம் என்பதால் பாதுகாப்பு மிகக் கடுமையாக இருந்தது. இருப்பினும் ஏராளமான தொண்டர்கள் கூடியதால் நுழைவாயிலில் நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ஒழுங்கு படுத்தினர். கூட்டம் அமைதியாகவும் உற்சாகமாகவும் நடைபெற்று முடிந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal