‘எம்.ஜி.ஆர். போல விஜய்யும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவருவார்’ என புதுவையில் பேசியிருக்கிறார் த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா!
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “ ஏன் புதுச்சேரிக்கு வந்தீர்கள் என கேட்கிறார்கள், இதைப்போலவே அப்போது எம்ஜிஆரிடமும் கேட்டார்கள். புதுச்சேரி மக்கள் நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருத்துவம் போன்றவற்றுக்காக ஏங்கிக் கொண்டுள்ளனர்.
அன்று எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது, தமிழகத்துக்கு மட்டும் யோசிக்கவில்லை, புதுச்சேரிக்கும் சேர்த்து திட்டங்கள் வைத்திருந்தார். அதுபோல விஜய்யும் புதுச்சேரிக்கும் சேர்த்து திட்டங்கள் வைத்துள்ளார். அதனை அவர் பேசும்போது சொல்வார்.
தவெக மூலமாக புதுச்சேரியின் அடுத்த 50 ஆண்டுகால வரலாறு புதிதாக எழுதப்படும். கூடிய விரைவில் புதுச்சேரியில் மிகப்பெரிய பிரச்சாரத்தை தலைவர் விஜய் நடத்துவார். புதுச்சேரியில் ஒரு மாற்றம் வருமா, வேலைவாய்ப்பு, சிறந்த கல்வி கிடைக்குமா என்ற ஏக்கம்தான் இவ்வளவு பெரிய கூட்டத்தை இங்கே கூட்டியுள்ளது.
தவெக தலைவர் விஜய் வரும் 2026 தேர்தலில் தமிழக முதல்வராக உருவாகி, புதுச்சேரியிலும் தவெக முதல்வரை உருவாக்குவார். அதற்கான எழுச்சி பயணமாக இன்றைய பயணம் அமைந்துள்ளது” என்றார்
