அடுத்தடுத்து அண்ணாமலை டெல்லி சென்றுள்ள விவகாரம்தான் இருவேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. அதாவது, என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து டி.டி.வி. விலகியதற்கு பின்னயில் அண்ணாமலை இருப்பதாக கூறப்பட்டது. அடுத்தது, அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்கிற விவாதமும் எழுந்திருக்கிறது.

கோயம்புத்தூரில் இருந்து நேற்றிரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. ஓ.பி.எஸ், டி.டி.வியுடனான சந்திப்புகளுக்கு பின், ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

அண்ணாமலையின் அடுத்தடுத்த டெல்லி பயணம் குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், கோவையில் நேற்று மாலை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை – டிடிவி தினகரன் சந்திப்பு நடந்தது. அப்போது தனது வீட்டில் அண்ணாமலை டிடிவி தினகரனுக்கு இரவு விருந்து கொடுத்தார். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது அண்ணாமலைக்கு வந்த போனில் திடீரென அவர் டெல்லியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. டிடிவி தினகரன் சந்திப்பை முடித்துவிட்டு இரவு 9.30 மணிக்கு விமானத்தில் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ்&-அமித்ஷாவை சந்தித்த அடுத்த நாள் அண்ணாமலை அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார்; இந்நிலையில் டிடிவியை சந்தித்த பின் அண்ணாமலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்

ஏற்கனவே டெல்லியில் உள்ள பா.ஜ.க தேசியத் தலைவர்களுக்கு தமிழக பாஜக பிரிவு மீது அதிருப்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தை மாநில பாஜக கட்சி முறையாகக் கையாளத் தவறியதே இதற்குக் காரணம் எனக் கருதுகின்றனர். இவ்விவகாரம் தமிழக பா.ஜ.கவுக்குள் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. முன்னதாக, அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி இல்லாத போது தமிழக பா.ஜ.கவுக்கு அண்ணாமலை தலைமை தாங்கினார். பின்னர் கூட்டணியை மனதில் வைத்து அண்ணாமலை நீக்கப்பட்டார். நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவரானார். அண்ணாமலை தலைமைப் பதவியை மீண்டும் பெற முயன்று வருகிறார். திருப்பரங்குன்றம் சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாஜக சென்னை அலுவலகத்தில் நீண்ட காலத்திற்கு பின் ஊடகங்களிடம் பேசிய அண்ணாமலை, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது. சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு, தர்காவுக்கு செல்லும் பாதை ஆகிய 3 இடங்கள் மட்டுமே தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது. 2014, 2017 ஆம் ஆண்டுகளில் வெளியான தீர்ப்புகளை அமைச்சர் ரகுபதி திரித்து உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். தர்காவில் இருந்து 50 மீட்டரில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என 1ஆம் தேதி ராமரவிக்குமார் கோர்ட்டுக்கு சென்றார். அப்போது மதுரை கிளை நீதிமன்றத்தில், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நியாயப்படி பார்த்தால் தங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் தர்கா நிர்வாகம்தான் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் தூணில் விளக்கேற்றினால் எங்கள் மனம் புண்படும் என அவர்கள்தான் தீபத் தூணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு கூறியிருக்க வேண்டும். ஆனால் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். திமுக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார். சிக்கந்தர் தர்கா இருப்பதால் சிக்கந்தர் மலை என திமுக அரசு பெயரிட்டு ரசித்தது. சிக்கந்தர் மலை என பெயரிட்டதால் ராமநாதபுரம் எம்பி அங்கு போய் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது இந்த திமுக அரசும், கோயில் செயல் அலுவலரும் எங்கே போயிருந்தார்கள், என்று அண்ணாமலை பேசி இருந்தார்.

பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் பேசுவதற்கு பின் அமித் ஷா கொடுத்த கிரீன் சிக்னலே காரணம் என்கிறார்கள். அதாவது அண்ணாமலைக்கு மீண்டும் முக்கியத்துவம் தர டெல்லி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை அமித் ஷாவிடம் பேசிய சில விஷயங்களே இதற்கு காரணம் என்கிறார்கள். நயினார் நாகேந்திரன் பெரிய போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், பா.ஜ.க மாநில அளவில் தனது பலத்தை வெளிப்படுத்தியிருக்கும் என அண்ணாமலை ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கக் கிடைத்த பெரிய வாய்ப்பை கட்சி இழந்ததாகவும், தாமதமும் குழப்பமும் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ராம ரவிக்குமார் குழுவும் இதே விமர்சனத்தை முன்வைக்கிறது.

டெல்லிக்கு இது தொடர்பாக விரிவான அறிக்கையை அண்ணாமலை அனுப்பி உள்ளார். அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை இதை பற்றிய ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளார் என்கிறார்கள். அதில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பலவீனமாகக் கையாண்டது, குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில், தமிழக பா.ஜ.கவின் இமேஜுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டி உள்ளாராம். இதன் காரணமாகவே அமித் ஷா, அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து பேசினார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பொறுப்பில் இருந்தும், அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம், தமிழக தொண்டர்களிடையே குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மத்தியத் தலைமை அண்ணாமலையின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொண்டதன் தெளிவான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது. டெல்லியிலிருந்து திரும்பிய அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதே நிகழ்வில் முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தோன்றினார். இது கட்சியில் ஏற்பட போகும் மாற்றத்திற்கான அறிகுறிகள்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் அண்ணாமலைக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க மேலிடம் ஆயத்தமாகி வருகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal