‘‘2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திமுக துடைத்தெறியப்படும், இதனை ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசமாக கூறினார்.
குஜராத்தில் பல்வேறு அரசு திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முதற்கொண்டு தற்போது வரை பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் 3வது முறையாக மோடி பிரதமர் ஆனார். பல ஆண்டுகளுக்கு பின் நிகழ்த்தப்பட்ட சாதனை இது.
அனைத்துத் துறைகளிலும் நம் நாடு வளர்ச்சி கண்டு, உலக நாடுகள் மத்தியில் சிறந்த நாடாக மாறும் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளில் தலைவர்களோ, கொள்கைகளோ இல்லை. நாட்டில் எங்குமே அவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.
உங்கள் முன்னால், இந்த மேடையில் இருந்து கொண்டே மம்தா பானர்ஜி, ஸ்டாலின் ஆகியோருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பீகாரை அடுத்து, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியானது, தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று, பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தம். நீங்கள் அதற்கு தயாராக இருங்கள்.
2026ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும். மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரசும், தமிழகத்தில் திமுகவும் துடைத்தெறியப்படும்’’இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அவரின் பேச்சைக் கேட்ட அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் கரவொலி எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. வெகு விரைவில் அமித் ஷா தமிழகம் வர உள்ள சூழலில், முதல்வர் ஸ்டாலின் பெயரை மேடையில் குறிப்பிட்டு, அரசியல் ரீதியாக அமித் ஷா பேசி இருப்பது, குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தவிர, தமிழகத்தில் 8 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அமலாக்கத்துறை வைத்து வருவதும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் நெருக்கடி அதிகரித்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
