பிரபல மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில், போதிய ஆதாரம் இல்லை என்பதால் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டார். பல்சர் சுனி உட்பட 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் நீதிமன்றம் அறிவித்தது.

பிரபல மலையாள நடிகர் திலீப். இவரது முன்னாள் மனைவி நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பின் ரகசிய உறவுகளை இன்னொரு நடிகை, மஞ்சு வாரியரிடம் கூறிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு வாரியர், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

இதற்கு, குறிப்பிட்ட அந்த நடிகை தான் காரணம் என்று முடிவு செய்த திலீப், கூலிப்படையை பயன்படுத்தி நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்பது குற்றச்சாட்டு. இந்த சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு நடந்தது. பிரபல நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கை விசாரித்த போலீசார், நடிகர் திலீப் மற்றும் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்தனர். திலீப் இரண்டரை மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மலையாள திரையுலகில் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பவும் இந்த சம்பவம் காரணமாக அமைந்தது.

எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டன. வழக்கின் விசாரணை அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் நடிகர் திலீப் மீது வழக்கு பதியப்பட்டது.

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வெவ்வேறு நீதிமன்றங்களில் இது தொடர்பாக வழக்குகள் நடத்தப்பட்டன. 28 பேர் பிறழ் சாட்சியம் அளித்த இந்த வழக்கில் இன்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாததை காரணம் காட்டி, நடிகர் திலீப் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். பல்சர் சுனி உட்பட 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் திலீப் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, மேல் முறையீடு செய்யப்படும் என்று பாதிக்கப்பட்ட நடிகையின் தரப்பு வழக்கறிஞர் அறிவித்தார்.

தீர்ப்பை கேட்டதும் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் திலீப், ‘‘இத்தனை காலம் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. எனக்காக வழக்கு நடத்திய, ஆறுதலாக இருந்த அனைவருக்கும் நன்றி’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal