அ.தி.மு.க.வின் சீனியரான செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தாலும், அவரால் விஜய்யை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் தொடர்ச்சியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழை பாடி வருகிறார். இது த.வெ.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் செங்கோட்டையனின் விசுவாசிகள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், த.வெ.க உயர்மட்ட நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன், ஜெயலலிதா நினைவு நாளையொட்டி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன்‘‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கார்த்திகை தீபத் திருநாள் விழாவையொட்டி, சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையனும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், ‘‘தீமையில் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும், அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்’’ எனத் தெரிவித்திருந்தார்

மேலும் அந்தப் பதிவில் தவெக கொள்கைத் தலைவர்கள் காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகிய 5 தலைவர்களின் படங்களோடு மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களும் தவெக தலைவர் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன. செங்கோட்டையன் பதிவிட்ட இந்தப் பதிவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றிருந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. அதிமுகவில் இருந்துவிட்டு தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் பதிவில் இப்போதும் எப்படி ஜெயலலிதா படம் இருக்கலாம் என விவாதம் நடந்தது.
தவெக ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டதா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தப் படத்தை செங்கோட்டையன் நீக்கியிருந்தார். ஆனால், எந்த மாற்றமும் செய்யாமல் அதை நேற்று மீண்டும் பதிவிட்டார். இது தவெகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
செங்கோட்டையனின் தொடர் பதிவுகள் விஜய்யை ஏகத்துக்கும் டென்ஷனில் ஆழ்த்தியிருக்கிறதாம்.
