“நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்தச் சூழலிலும் சொல்லவில்லை” என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “செங்கோட்டையன் தவெகவுக்கு சென்ற பிறகு அவரும் என்னிடம் பேசவில்லை, நானும் அவருடன் பேசவில்லை.
அடுத்த கட்ட நகர்வு தமிழக மக்களின் எண்ணப்படி தான் இருக்கும். அதிமுக, தொண்டர்களின் இயக்கம். அது எப்போதும் பலவீனமடையாது. டெல்லியில் அமித் ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அப்போது தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழல் குறித்து எடுத்துக் கூறினேன். அவர் கவனமாக கேட்டு, அன்பான வார்த்தைகளை கூறி அனுப்பியுள்ளார்.
பிரிந்திருப்பவர்கள் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என அமித் ஷாவிடம் கூறினேன். நான் தனிக்கட்சி தொடங்குவேன் என எப்போதும், எந்தச் சூழலிலும் சொல்லவில்லை.” என தெரிவித்தார்.
டெல்லி போய்விட்டு வந்த பிறகு ‘தனிக்கட்சி தொடங்கமாட்டேன்’ என ஓ.பி.எஸ். பேசியிருப்பது பற்றி ‘மேலிட’ வட்டாரத்தில் பேசினோம். ‘‘சார், தமிழகத்தில் அ.தி.மு.க. மேலும், மேலும் பலவீனமாகி வருகிறது என மத்திய உளவுத்துறை நோட் போட்டிருக்கிறது. இந்தத் தகவல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் சென்றிருக்கிறது.
ஏற்கனவே, ‘மேலிடம்’ தன்னை கைவிட்டுவிட்டதாக எண்ணி த.வெ.க.வில் இணைந்துவிட்டார் செங்கோட்டையன். செங்கோட்டையன் பின்னால் பெரிய படைபலம் இல்லை என்று சொன்னாலும், அவர் பெயருக்கு இன்னும் அ.தி.மு.க.வில் மரியாதை இருக்கிறது.
இந்த நிலையில்தான் ஓபிஎஸ்ஸை சந்தித்த அமித்ஷா, ‘பொறுமையாக இருங்கள் விரைவில் நல்லது நடக்கும்’ என்று கூறியிருக்கிறாராம். அதாவது, அ.தி.மு.க.வில் உங்களுக்கு இடம் உண்டு என்கிற ரீதியில் அமித் ஷா உறுதி கொடுத்திருக்கிறாராம். அதனால்தான் தனிக்கட்சி எண்ணத்தை தற்காலிகமாக கைவிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். தமிழகம் வருவதற்கு முன்பு ‘ஆபரேஷனை’ நடத்திவிட்டுத்தான் அமித்ஷா வருவார்’’ என்றனர்.
