கடந்த ஒன்றரை வருட காலமாக காலியாக உள்ள சிவகங்கை மாவட்ட துணைச் செயலாளர் பதவியை நிரப்பாமல் கட்சி தலைமையும், மாவட்ட திமுகவும் அலட்சியம் காட்டிய வருவது ஒட்டுமொத்த சிவகங்கை மாவட்ட உடன் பிறப்புகளையும் குமுற வைத்துள்ளது.

குறிப்பாக இந்த மாவட்ட து.செ.பதவியானது திமுகவின் பை-லாவின்படி ஆதிதிராவிடர் கோட்டா என்பதால்,2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் ஐந்து மாதங்கள் எஞ்சியுள்ள சூழ்நிலையில், காலம் காலமாக திமுகவுக்கு வந்து கொண்டிருக்கிற ஆதிதிராவிட ஓட்டு வங்கியானது திமுகவை விட்டு விலகிச் சென்று விடுமோ என்பதுதான் ஒட்டுமொத்த உ.பி.க்களின் மனக்கவலையாக உள்ளது.

சிவகங்கை மாவட்ட து.செ. பதவியானது காலியானது குறித்து, இந்த பதவி ஒன்றரை வருடங்களாக நிரப்பப்படாமல் “இழுத்தடிப்பு” பிண்ணனி குறித்தும் நம்மிடம் பேசிய சிவகங்கை மாவட்ட சீனியர் உ.பி.க்கள் கூறும்போது,சிவகங்கை மாவட்ட திமுகவின் துணைச் செயலாளராக இருந்த மணிமுத்து, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவர் காலமானது முதல் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் இன்றுவரைக்கும் து.செ. பதவியை நிரப்புவதற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் பெரிய கருப்பன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காரணம்…. ஆதி திராவிடர் கோட்டாவில் இந்த பதவியை பெற்றிட மானாமதுரை முனிசிபல் சேர்மன் மாரியப்பன் கென்னடி, அமைச்சர் குட்புக்கில் உள்ள கொரட்டி சேது, மாவட்ட அறங்காவலர் குழு தலைவரான பெரியகோட்டை ஜெயமூர்த்தி, கருப்பு சிவப்பு துண்டு பேராசிரியர் சிங்கமுத்து என தகுதியானவர்கள் பலபேர் இருந்தும், இதனை நிரப்பாமல் அமைச்சரின் இழுத்தடிப்புக்கு பின்னால் இருப்பது பக்கா “பாலிடிக்ஸ்ஸே” காரணம் என்றவர்கள் அதனையும் நம்மிடம் எடுத்து வைத்தார்கள்.

ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசியும், மா.செ.வும் அமைச்சருமான பெரியகருப்பனும் பாம்பும், கீரியுமாக உட்கட்சி அரசியலில் மோதிக் கொண்டு கிடக்கிறார்கள். தீவிர கனிமொழி ஆதரவாளரான மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி, தனது ஆதரவாளர் ஒருவருக்கே மாவட்ட து.செ.பதவி கிடைக்க வேண்டும் என்பதில் உடும்பு பிடியாக உள்ளார். அதே வேளையில், அமைச்சர் பெரிய கருப்பனோ எந்த சூழ்நிலையிலும் மாவட்ட து.செ.பதவி தமிழரசி ஆதரவாளருக்கு கிடைத்து விடக்கூடாது, காலியாக கிடந்தாலும் கிடக்கட்டும் என்பதற்காகவே தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் “இருட்டடிப்பு” செய்து வருகிறார்.

சமீபத்தில் தென் மண்டலத்தில் மு.க.அழகிரி இருந்த இடத்தில் கனிமொழியை அமர்த்திய கட்சி தலைமை, தென் மாவட்டங்களில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பையும் கனிமொழியிடமே கட்சி தலைமை வழங்கியுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கட்சியில் தமிழரசியின் கையும் “ ஆட்டோமேடிக்காகவே” ஓங்கி விடலாம் என்ற அச்ச உணர்வின் அடிப்படையிலேயே மா.செ.வான அமைச்சர் பெரிய கருப்பன் காலம் தாழ்த்தி வருகிறார் என்றனர்.

இதற்கிடையே சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவர் பேராசிரியர் ம.சிங்கமுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து உடன்பிறப்புகளிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். முதல்வர், துணை முதல்வர் உள்பட மாவட்டச் செயலாளர், அமைச்சர் என அனைவரின் குட்புக்கிலும் இடம்பிடித்திருக்கிறார். உதயநிதியின் பிறந்தநாளன்றுக்கூட, போஸ்டர்கள் அடித்து கொண்டாடியிருக்கிறார் பேராசிரியர் ம.சிங்கமுத்து.

எனவே, தி.மு.க. தலைமை தகுதியானவருக்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவியை வழங்கவேண்டும் என்பதே சிவகங்கை மாவட்ட உடன் பிறப்புக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal