தமிழகத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி டிசம்பர் 5 அன்று மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்தார்

மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒரு பழமையான மலைக்கோவில். இந்தக் கோவிலின் உச்சியில் ஒரு பெரிய கல் தூண் உள்ளது. அதற்கு “தீபத்தூண்” என்று பெயர். நூற்றாண்டுகளாக கார்த்திகை தீபத் திருவிழாவன்று (கார்த்திகை மாத பவுர்ணமி) இந்தக் கல் தூணின் உச்சியில் பெரிய தீபம் ஏற்றுவது வழக்கம். 2025-ல் கார்த்திகை தீபம் டிசம்பர் 3-ம் தேதி வந்தது. ஆனால் அன்று அரசு & கோவில் நிர்வாகம் அந்த பழைய கல் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக கீழே ஒரு மண்டபத்தில் சாதாரண தீபம் ஏற்றினார்கள்.

கோவில் மலையின் அடிவாரத்தில் “சிகந்தர் பாதுஷா” என்ற இஸ்லாமிய தர்கா (புனித தலம்) உள்ளது. “பெரிய தீபம் ஏற்றினால் புகை, தீப்பொறி தர்காவைப் பாதிக்கும்; மதக்கலவரம் வரலாம்” என்று சில முஸ்லிம் அமைப்புகளும், இடதுசாரி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, பாதுகாப்பு காரணம் காட்டி தீபம் ஏற்ற தடை விதித்தது.

இந்து அமைப்புகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நீதிபதி ஜி.ஆர். ஸ்வாமிநாதன் (நவம்பர் இறுதியில்) தெளிவான தீர்ப்பு கொடுத்தார்:“கல் தூணில் தீபம் ஏற்றுவது பழங்கால தமிழ் பாரம்பரியம் இது இந்து சம்ப்ரதாயம். தர்காவுக்கு எந்த ஆபத்தும் வராது என்று அரசே உறுதி அளித்துள்ளது. எனவே கார்த்திகை அன்று கட்டாயம் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டார். பிறகு அங்கு தீபம் ஏற்றப்படவில்லை.

இதை நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகக் கருதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நேற்று மாலை, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.இளங்கோவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சில நிமிட வாதங்களுக்குப் பிறகே அந்த மனுவை அமர்வு தள்ளுபடி செய்தது. இதனால் நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த “மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்” என்ற உத்தரவு முழு வலுவுடன் நிலைத்தது.

இந்தச் சம்பவத்தை வைத்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி டிசம்பர் 5 அன்று மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்தார். அதில் அவர் கூறிய முக்கியக் குற்றச்சாட்டு: “ஆர்.எஸ்.எஸ்-பாஜக தொடர்ந்து தமிழ்நாட்டில் மதவாத அரசியலைத் திணிக்க முயல்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து வகுப்புவாதக் கலவரத்தை உருவாக்க சில உள்நோக்கம் கொண்ட குழுக்கள் திட்டமிட்டு செயல்படுகின்றன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஆகம விதிகள் ஏற்க மறுக்கின்றன;ஆனால் அதே ஆகம விதிகள் கார்த்திகை திருநாள் முடிந்த பின்னரும் தீபம் ஏற்ற அனுமதிப்பதாக இப்போது சொல்கிறார்கள். இது தெளிவான முரண்பாடு” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் ‘‘தமிழ்நாட்டில் சமூக இணக்கத்தைக் குலைக்கும் இத்தகைய முயற்சிகளை முறியடிக்க மதுரை மக்களும் தமிழ்நாடு அரசும் ஒன்றிணைந்து நிற்போம்’’ என்றும் அவர் உறுதியளித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal