சென்னைக்கு அருகே ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ள வலுவிழந்த ‘டிட்வா’ புயலால் சென்னையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

இதுகுறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ‘‘சென்னை கடற்கரைக்கு அருகே கடந்த 24 மணி நேரமாக, ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுவிழந்த டிட்வா நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்து வருகிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் சென்னை கடற்கரைக்கு அருகே அடுத்த 18 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிகிறது. அதன் பின்னர் சென்னை கடற்கரைக்கு தெற்கு பக்கமாக நகர்ந்து இன்று மாலை முதல் இரவுக்குள் கல்பாக்கம் பகுதியில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும். சென்னை அட்சரேகைக்கு மேலே இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் நகராததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து மேகக் கூட்டங்களை இன்று நாள் முழுவதும் விட்டுவிட்டு உருவாக்கி மழையை கொடுக்கும். மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் கடலோரத்தை நெருங்கும் போது நல்ல மழையை கொடுக்கும்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் இந்த டிட்வா இன்று மாலை அல்லது இரவு சென்னைக்கு தெற்கே நகர்ந்து செல்லும் போது, சென்னை, திருவள்ளூரில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது’’ என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ‘‘சென்னைக்கு கிழக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, சென்னையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) முதல் 5-ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal