‘இந்தியாவில் இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதுதான் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியா’’ -அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியிருகிறார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டாக்டர் சரவணன், ‘‘ தி.மு.க. 525 பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியைப் பிடித்தது. 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்ற வில்லை.

தமிழகத்தில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அரசுத் துறையில் 7 லட்சத்திற்கும் அதிகமான காலிபணியிடங்கள் இருக்கிறது. ஐந்தாயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக்கில் அமோகமாக விற்பனை அரசே செய்து வருகிறது.

இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாகியிருக்கிறார்கள். கிராமங்களிலும், நகரங்களிலும் இன்றைக்கு இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்கள். 19 சதவீதம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என புள்ளி விபரங்கள் சொல்கிறது.

கடந்த 10 ஆண்டு கால ஜெயலலிதாவின் ஆட்சியில் மட்டும் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1,450 மருத்துவ இடங்களை எடப்பாடி பழனிசாமி பெற்றுத் தந்தார். 7.5 சதவீத இடக்ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனால்தான் அரசு பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவு நனவானது.

எனவே, மக்கள் விழிப்புடன் இருந்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியாரை முதலமைச்சராக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு விடிவுகாலம் பிறக்கும்’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal