ராஜ்யசபா எம்.பி. விவகாரத்தில் எடப்பாடியை கடுமையாக விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த், தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதாக பேச்சுவார்தை எழுந்தது. தி.மு.க.வும் மறைமுகமாக தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில்தான், ‘ராஜ்யசபா விவகாரத்தில் தேதி குறிப்பிடவில்லை… எடப்பாடி பழனிசாமி மீது தவறில்லை’ என திடீரென்று மாற்றி பேசினார் பிரேமலதா விஜயகாந்த். ‘அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி வைக்கப்போகிறாரோ?’ என்ற பேச்சு எழுந்தது.
இந்த நிலையில்தான், ‘‘திமுக, அதிமுகவுடன் தேமுதிக மாறி மாறி கூட்டணி பேசி வருவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை’’ என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
‘‘தேமுதிகவுடன் அனைத்து கட்சிகளும் தோழமைக் கட்சிகளாகவே இருக்கிறார்கள். தேர்தல் சமயத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பப்படி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்’’ என்று கூறியுள்ளார்.
