புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சி அனுமதிக்காக மீண்டும் டிஜிபி அலுவலகத்துக்கு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வந்த நிலையில், மீண்டும் நாளை வருமாறு ஜஜி அனுப்பி வைத்தார். இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, “கண்டிப்பாக அனுமதி கொடுக்கப்படும்” என ஆனந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு பயணம் நடத்த கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி தவெக நிர்வாகிகள் முதல்வரை சந்தித்தும், காவல் துறை தலைமையகத்திலும் அனுமதி கேட்டனர்.

முன்னதாக, கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சந்திப்புக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார். இதையடுத்து புதுச்சேரியில் நடைபெற இருந்த மக்கள் சந்திப்பு பயணமும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரத்தில் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5-ம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு, தவெக நிர்வாகி புதியவன் தலைமையில் தவெகவினர் புதுச்சேரி டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் மனு அளித்தனர். அந்தக் கடிதத்தில், ‘தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் காலாப்பட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்குகிறார்.

அதன்பின் அஜந்தா சிக்னல், உப்பளம் வாட்டர் டேங்க் (சோனாம்பாளையம் சந்திப்பு), மரப்பாலம் சந்திப்பு, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில் ஆகிய இடங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் உப்பளம் சோனாம்பாளையம் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் உரையாற்றுகிறார்” என அனுமதி கோரிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர்.

இச்சூழலில், கடந்த சனிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு ஆனந்த் வந்தார். டிஜிபி இல்லாததால் திங்கள்கிழமை வருமாறு காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று ஐஜி ஏ.கே. சிங்கிளாவை சந்தித்து விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி தருமாறு வலியுறுத்தினார். “டிஜிபி, டிஐஜி ஊரில் இல்லை. அவர்கள் நாளை வருவார்கள் நாளை வந்தவுடன் வாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார்.

இதைத் தொடர்ந்து வெளியே வந்த ஆனந்த், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் தருவதை தவிர்த்து சென்றார். பின்னர் ஆனந்த் கூறுகையில், “கண்டிப்பாக அனுமதி கொடுக்கப்படும். நாளை இதற்கான கூட்டத்துக்கு வரசொல்லியுள்ளார்கள்” என்றார். ரோடு ஷோவுக்காகவா, மைதானத்தில் கூட்டம் நடத்தவா எதற்கு அனுமதி தரவுள்ளனர் என்று கேட்டதற்கு, அவர் பதில் அளிக்காமல் புறப்பட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal