த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணைதான், த.வெ.க.வினருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. தவிர, அமித் ஷாவை சந்திக்கும் மனநிலைக்கு விஜய் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் நேற்று சிபிஐ விசாரணைக்காக நேரில் ஆஜராகினர்.

பிரச்சார பரப்புரையின் போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்களிடம் சம்பவ நாளன்று நடந்த நிகழ்வுகள், பிரச்சார பேருந்தின் சிசிடிவி காட்சிகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8.30 மணியளவில் நிறைவடைந்தது. 10 மணி நேரமாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டர். மீண்டும் அவர்களிடம் இன்று விசாரணை நடந்து வருகிறது.

சி.பி.ஐ. விசாரணை அதிகாரிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் கேட்ட கிடுக்கிப்பிடி கேள்விகள்தான் அவர்களை வியர்க்க வைத்ததாக கூறப்படுகிறது. காலை 12 மணிக்கு விஜய் வருவதாக அறிவீத்தீர்களே… ஏன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவில்லை… என்பது உள்பட பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் துளைத்தெடுத்தனர். இதனால், ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்தின் முகம் வியர்த்ததாம். சி.பி.ஐ. விசாரணை இந்தளவிற்கு கிடுக்கிப்பிடியாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தவிர, சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த குழுவிடம் கரூர் வழக்கின் முதல் கட்ட ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி இந்த ரிப்போர்ட்டை ஆய்வு செய்வார். கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையின் போது இவரின் பதில் ரிப்போர்ட் தாக்கல் செய்யப்படும்.

முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்தார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

வழக்கறிஞராக, நீதிபதி ரஸ்தோகி பல சட்டப் பிரிவுகளில் பணியாற்றினார். அதே சமயம், அவர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சேவைச் சட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 1990ஆம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ஆம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார். 1999 முதல் 2000 வரை ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, 2013ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி வரை மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றினார். அவரது தலைமையின் கீழ், இந்த ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்திடமிருந்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையேதான், தவெக உடன் கூட்டணி அமைக்க பாஜக நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவர் அமித் ஷா விரைவில் தமிழகம் வரவுள்ளார். அவரது வருகை, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான கட்சிகளின் தேர்தல் பணிகளுக்கு இடையே முக்கியத்துவம் பெறுகிறது. இவரின் இந்தப் பயணம், மாநிலத்தில் அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதும், அவர்களின் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்வதும் அமித் ஷாவின் முக்கிய நோக்கமாகும். அதிமுக உட்கட்சி மோதல்கள், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் வருத்தங்கள், எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அமித் ஷா இதில் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி உறவை மேலும் வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

அதேபோல், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகளையும் அமித் ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி, தமிழகத்தில் பாஜகவின் நிலையை வலுப்படுத்தும் என பாஜக தலைமை நம்புகிறது. ஏனெனில், தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. விஜய் அல்லது அவரது முக்கியப் பிரதிநிதிகளுடனான அமித் ஷாவின் சந்திப்பு, சாத்தியமான ஒப்பந்தங்கள், இடப் பங்கீடு மற்றும் கொள்கை ஒருமைப்பாடு குறித்து கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்று அவர் விஜயை சந்திப்பார்.. அல்லது விஜயின் பிரதிநிதியாக வழக்கறிஞர் ஒருவரை சந்திப்பார் என்கிறார்கள். இது அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையலாம். மேலும், விஜய்யின் நெருங்கிய பிரதிநிதி ஒருவர் அமித் ஷாவைச் சந்தித்து பாஜகவின் திட்டங்களை முதலில் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைப் பொறுத்து, விஜய் நேரடியாக அமித் ஷாவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் சி.பி.ஐ.யின் கிடுக்கிப்பிடி விசாரணை த.வெ.க. கூடாரத்தையே ‘மாற்றி யோசிக்க’ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal