கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் இளைஞர்களை தூண்டும் வகையில் சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா மீது பதிந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது அவரை பார்க்க கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து அதில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் நடந்ததும் தவெக தலைவர் விஜய் உள்பட அனைத்து நிர்வாகிகளும் அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர். இந்த நிலையில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செப்டம்பர் 29ஆம் தேதி அதிகாலை ஒரு ட்விட்டர் பதிவை போட்டிருந்தார்.
அதில் ” என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்து நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன். ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை. இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.
துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இலங்கை, நேபாளம் போல புரட்சி வெடிக்கும்.. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாக கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்” என கூறியிருந்தார்.
Gen Z புரட்சியை தூண்டும் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து அரை மணி நேரத்தில் அந்த பதிவை ஆதவ் அர்ஜுனா உடனடியாக நீக்கிவிட்டார். இதனிடையே ஆதவ் அர்ஜுனாவின் இந்த பதிவுக்காக சென்னை சைபர் கிரைம் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா மனுதாக்கல் செய்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் மனுவை தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஆதவிற்காக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகினார். அப்போது “அந்த பதிவு எந்த உள்நோக்கத்திலும் பதிவு செய்யப்படவில்லை. அதை அடுத்த 34 நிமிடங்களில் நீக்கிவிட்டேன். ஆரம்பகட்ட விசாரணை கூட நடத்தாமல் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆதவ் அர்ஜுனாவின் பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தது. ஆதவ்வின் கருத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இன்று பிற்பகலில் தீர்ப்பளிக்கிறார்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு சாதகமாக வருகிறதா இல்லை அவருக்கு எதிராக தீர்ப்பு வருகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
