பிஹாரில் நாளை (நவம்பர் 20) புதிய அரசு அமைக்கப்படும் நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

பாட்னாவின் வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) 10வது முறையாக பிஹார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ் குமார், இன்று ஜேடியு சட்டப்பேரவை கட்சியின் தலைவராகவும், பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜேடியு தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா, “பிஹார் முதல்வராக 10வது முறையாக பதவியேற்கும் நிதிஷ் குமார், எங்கள் சட்டப்பேரவை கட்சியின் தலைவராக இன்று முதலில் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பிறகு, பிற்பகல் 3.30 மணிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதன் பின்னர் இன்று மாலையில் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து, புதிய அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவார்” என்று கூறினார்.

நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல மத்திய அமைச்சர்கள் மற்றும் என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கிடையில், அமைச்சரவை இடங்கள், துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவி குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கும் என்டிஏ கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பிஹாரில் புதிய அரசு அமைப்பதற்கு முன்னதாக, ஜேடியு தலைவர்கள் சஞ்சய் ஜா மற்றும் லாலன் சிங் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுமார் மூன்று மணி நேரம் நீடித்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். முன்னதாக நேற்று ஜேடியு தலைவர் நிதிஷ் குமார், பாட்னாவில் நடைபெறும் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal