‘பா.ம.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் தமிழகத்தில் 2026ல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்’ என டாக்டர் ராமதாஸ் கூறினார். இந்த நிலையில், ‘தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணிதான் 2026ல் ஆட்சியமைக்கு. தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள்’ என பிரேமலதாவும் பேசியிருக்கிறார்.

மதுரை கூடல் நகர் பகுதியில் தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நிர்வாகிகளிடையே பேசினார்.அப்போது பேசிய அவர், ‘‘தமிழகத்தில் ஆண்ட கட்சிக்கும் ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தது தேமுதிக என பெருமையுடன் சொல்கிறேன். தேமுதிகவினர் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். விரைவில் தேர்தல் செய்திகள் வர உள்ளது.

எஸ்.ஐ.ஆர். பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. தேமுதிகவின் அனைத்து நிர்வாகிகளும் தேமுதிக வாக்குகளை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளவர்கள் எஸ்.ஐ.ஆர். முறைகேடு நடப்பதாகவும், ஆண்ட கட்சி முறையாக நடப்பதாகவும் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். கேப்டனின் அனைத்து நிகழ்வுகளும் மதுரையில் இருந்து தான் தொடங்கியது. 2005 கேப்டன் தொடங்கிய கட்சியின் முதல் மாநாடு உலகிலேயே நம்பர் ஒன் மாநாடு என பெருமை பெற்றுள்ளது.

2011 மதுரையில் திருப்பரங்குன்றம், மதுரை மத்திய தொகுதியை வென்றது தேமுதிக. கலைஞர் ஜெயலலிதா இருக்கும்போது மிகப்பெரிய சரித்திரத்தை உருவாக்கிய கட்சி தேமுதிக. கேப்டனின் கனவு லட்சியம் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிறைவேறும். நீங்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும்.

வருகின்ற 2026 சட்டமன்றத்தில் கூட்டணி அமைச்சரவை அமையும். தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக அமைச்சரவையிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. பிரேமலதா என்ற உடன் பிரதமர் என கட்சி நிர்வாகி கூறுகிறார். கடவுள் ஒருவர் தான் இறுதி எஜமானார். அவர் இறுதி கணக்கு போட்டால் யாரும் அதை தடுக்க முடியாது. விஜயகாந்த் முதல்வராகி இருந்தால் கூட ஊழல் குற்றசாட்டுக்களை வைத்திருப்பார்கள். ஆனால் அதுபோல எந்த குற்றச்சாட்டும் எழுந்து விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கடைசி வரை மக்கள் மனங்களில் நிரந்தரமாக இருந்துவிட்டார்’’ என்றார்.

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மௌனம் காத்து வரும் நிலையில், முன்பு அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகள் ‘அமைச்சரவையில் பங்கு’ என்ற அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பதுதான் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை யோசிக்க வைத்திருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal