தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என அறிவிக்கப்படாததால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என அறிவிக்கப்படாததால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நாடு முழுவதும் உற்றுநோக்கப்பட்ட நிலையில், தற்போது பிகாரில் யார் முதலமைச்சராவார் என்ற கேள்வியும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்கள் என்ற பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என்பதற்கு தற்போது வரை சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

பாஜகவும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போடியிட்டாலும், 85 இடங்களை பெற்ற நிதிஷ் கட்சியை முந்தி, பாஜக 89 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், இந்த முறை நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை பாஜக விட்டுக்கொடுக்குமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. தேர்தலுக்கு முன்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படாததே இந்த கேள்வி எழுப்பப்படுவதற்கு முக்கிய காரணம்.

தேர்தல் நேரத்தில் முன்னணி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகே தீர்மானிப்போம்’’ என கூறியிருந்ததும் தற்போது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

இதுதவிர, பிகாரில் நிதிஷ்குமாரின் உடல்நிலை குறித்து கேள்விகளை முன்வைத்த எதிர்க்கட்சிகள், மேடையில் அவரின் செயல்பாடுகளையும் காட்டமாக விமர்சித்திருந்தன. இதற்கு ஏற்ற வகையில், முதற்கட்ட தேர்தல் பரப்புரையில் நிதிஷ்குமார் அதிகம் தலைகாட்டவில்லை. சில வீடியோக்களை வெளியிட்டே பரப்புரை மேற்கொண்டார்.

ஆனால், இந்த நிலைமை இரண்டாம் கட்ட தேர்தலில் மாறியது. அதிகளவில் பொதுக்கூட்டங்களில் மட்டும் நிதிஷ்குமார் பங்கேற்றார். மேலும், இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார் என நேரடியாக கூறாவிட்டாலும், நிதிஷ் தலைமையில் மீண்டும் வெற்றி பெறுவோம் என கூறி, முதலமைச்சர் வேட்பாளர் குறித்த எதிர்க்கட்சிகளின் பேச்சுகளுக்கு மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த சூழலில் பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெற்ற பின்னர், எக்ஸ் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்த நிதிஷ்குமார், இதுவரை பொதுவெளியில் தலைகாட்டாததும், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விகளை வலுப்பெறச் செய்கிறது. இதனிடையே, பிகாரின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த கேள்விக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் முதலில் பதில் அளிக்காமல் சென்றார். ஆனால், பாட்னாவில் உள்ள இல்லத்தில் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு பேட்டியளித்த சிராக் பஸ்வான், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராவார் என தான் நம்புவதாக கூறினார்.

முந்தைய தேர்தல்களில், பாஜக அதிக இடங்களை பெற்றிந்தபோதும், நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியதைப் போலவே இந்த முறையும் நடக்கும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சியிடன் நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில், பிகார் தலைநகர் பாட்னாவில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், புதிய முதலமைச்சராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்படவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது எனினும், 10-ஆவது முறையாக நிதிஷ் குமார் பிகார் முதலமைச்சராவாரா அல்லது முதல் முறையாக பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராவாரா என்ற சஸ்பென்ஸ் நாளை உடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal