தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ‘2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும்தான் போட்டி’ என்று சொல்லிவருகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ‘இப்பவும் சொல்கிறேன் 2026ல் தி.மு.க.வுக்கும் தவெகவுக்கும் போட்டி’ என்று சொல்லி அ.தி.மு.க.வுன் கூட்டணி இல்லை என்பதை அறிவித்து விட்டார்.
இந்த நிலையில்தான், இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், ‘பீகாரைப் போன்று தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் இருக்காது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி இருக்கும். அ.ம.மு.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் அறிவிப்போம்’’ என்றார்.
தி.மு.க.வினரே தமிழகத்தைப் பொறுத்தளவில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான் போட்டி என்று கூறிவந்த நிலையில், விஜய், டி.டி.வி.தினகரன் போன்றோர் அ.தி.மு.க. போட்டியிலேயே இல்லை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
தமிழகத்தைப் பெறுத்தளவில் மாற்று அணி குறித்து பல வருடங்களுக்கு முன்பே முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தந்தி தொலைக்காட்சியில் நடந்த ‘மக்கள் மன்றம்’ நிகழ்ச்சியில்¢ அடித்துக் கூறியிருக்கிறார். அதாவது, ‘மாற்று அணி என்றால் யார்? அ.தி.மு.க.வுக்கு மாற்று தி.மு.க. என்று நாங்கள் சொல்கிறோம். தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க. என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள். இந்த இரு இயக்கங்களைத்தான் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று அன்றே கூறியிருக்கிறார்.
தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என டி.டி.வி.தினகரன் கூறியது குறித்து கு.ப.கி.யிடம் கேட்டபோது, ‘‘தம்பி… தமிழ்நாட்டை திராவிட இயக்கங்கள்தான் ஆளவேண்டும். மாற்று சக்திகள் உள்ளே புகுந்துவிடக்கூடாது. அப்படி உள்ளே நுழைந்தால் அது தமிழ்நாட்டிற்கு பேராபத்து!’’ என்றார் அதிரடியாக!
