த.வெ.க. தலைவர் விஜய் காங்கிரசுடன் கைகோர்க்க காய் நகர்த்தி வரும் நிலையில், அமித் ஷா தனது அதிரடி ஆட்டத்தை ஆடத் தயாராக இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தளவில் அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க.வை கொண்டுவந்துவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பல்வேறு வகைகளில் முயற்சித்தார். ஆனால், அந்த முயற்சி எடுபடவில்லை. ‘த.வெ.க.தலைமையில் கூட்டணி, நான்தான் முதல்வர் வேட்பாளர்’ என்பதில் உறுதியாக இருந்தார் விஜய்.
இந்த நிலையில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு கடந்த முறை ஒதுக்கியதைப் போல் 25 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்திருக்கிறது. ஆனால், 60 தொகுதிகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது. இதற்கிடையேதான் காங்கிரஸ் கட்சிக்கு விஜய் 75 தொகுதிகள் கொடுப்பதாக ‘மேலிடத்திற்கு’ தகவல் கொடுத்திருக்கிறாராம். அதாவது, எப்படியாவது காங்கிரசை த.வெ.க. கூட்டணியில் கொண்டு வந்துவிடவேண்டும் என அதிதீவிரமாக காய்நகர்த்தி வருகிறாராம் விஜய்.
இந்த தகவல்கள் மேலிடத்திற்கு சென்ற நிலையில்தான், அமித் ஷாவின் அதிரடி ஆட்டம் பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான (நாளை) பிறகு நடக்கும் என்கிறார்கள்.
இது தொடர்பாக மேலிட வட்டாரத்தில் பேசியேபோது, ‘‘சார், அமித் ஷா விரைவில் தமிழகம் வரவிருக்கிறார். பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதும், அ.தி.மு.க.வில், உள்ள மனக்கசப்புக்களை தீர்ப்பதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்த இருக்கிறர்.
அதிமுக உட்கட்சி மோதல்கள், எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் வருத்தங்கள், எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அமித் ஷா இதில் பேச வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கூட்டணி உறவை மேலும் வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
அதேபோல், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகளையும் அமித் ஷா சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி, தமிழகத்தில் பாஜகவின் நிலையை வலுப்படுத்தும் என பாஜக தலைமை நம்புகிறது.
ஏனெனில், தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. விஜய் அல்லது அவரது முக்கியப் பிரதிநிதிகளுடனான அமித் ஷாவின் சந்திப்பு, சாத்தியமான ஒப்பந்தங்கள், இடப் பங்கீடு மற்றும் கொள்கை ஒருமைப்பாடு குறித்து கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று அவர் விஜயை சந்திப்பார்.. அல்லது விஜயின் பிரதிநிதியாக வழக்கறிஞர் ஒருவரை சந்திப்பார் என்கிறார்கள். இது அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையலாம்.
மேலும், விஜய்யின் நெருங்கிய பிரதிநிதி ஒருவர் அமித் ஷாவைச் சந்தித்து பாஜகவின் திட்டங்களை முதலில் அறிந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தைப் பொறுத்து, விஜய் நேரடியாக அமித் ஷாவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
ஆனால், ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்கான பல வாய்ப்புகளை நிராகரித்துள்ளதாகத் தகவல்கள் வந்தன. தமிழ்நாட்டில் தனது தனிப்பட்ட அரசியல் பாதையை வகுப்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இதனால் பாஜக தலைவர்களை சந்திக்க அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அரசியல் வியூக வகுப்பாளர்களும் சில “நலம் விரும்பிகளும்” அமித் ஷாவுடன் விஜய்யை சந்திக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் தவெக வளரும், பாஜக வளரும், அதேபோல் விஜயும் ஆட்சி அதிகாரத்தை பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதனால் அமித் ஷாவை விஜய் சந்திக்க வேண்டும் என்று அவரிடம் சிலர் பேசி உள்ளனர். இதற்கு விஜய் இன்று வரை பிடி கொடுக்க வில்லை.
அதே சமயம், ‘பா.ஜ.க.வுடன் இனி எந்தக் காலத்திலும் ஒட்டும் இல்லை… உறவும் இல்லை… என எடப்பாடி பழனிசாமிக்கே ‘ஆபரேஷன்’ செய்து கூட்டணியை உறுதிப்படுத்திய அமித் ஷாவுக்கு, விஜய் எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஏற்கனவே வருமானவரித்துறை வழக்கு இருக்கிறது. தற்போது சிபிஐ வழக்கும் உள்ளது. சி.பி.ஐ. யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது விஜய்க்கு தெரியாதா? விரைவில் விஜய் ஒரு முடிவை எடுக்கவேண்டி வரும்’’ என்றனர்.
ஆக மொத்தத்தில் தமிழகத்தில் அமித் ஷாவின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. பீகாருக்குப் பிறகு தமிழகத்திலும் ‘சுபம்’ என முடியும் என்கிறார்கள் ‘மேலிட’ வட்டாரத்தில்!
