கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 2 பேர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆஜராகினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
அக்.31 மற்றும் நவ 1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் சாலையை சிபிஐயினர் அளவீடு செய்தனர். வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், நிறுவனம் நடத்தி வருபவர்கள், தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர், வெளி மாவட்ட போலீஸார், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் நவ.2-ம் தேதி காமராஜபுரத்தில் ராம்குமார் என்பவரை தேடிச் சென்ற சிபிஐ குழு, அவர் இல்லாததால் 3 பேர் கொண்ட குழு ரயில் மூலம் சென்னை சென்றனர். அங்கு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்குச் சென்ற சிபிஐ ,விஜய் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விவரங்களைக் கேட்டு சம்மன் வழங்கினர்.
இதையடுத்து நவ.8 மற்றும் 9-ம் தேதி ஆகிய இரு நாட்கள் தவெக வழக்கறிஞர் பிரிவு திருச்சி மண்டல இணைச் செயலாளர் வழக்கறிஞர் அரசு, தவெக சென்னை பனையூர் அலுவலக உதவியார் குருசரண், அவருடன் வந்த மற்றொருவர் என 3 பேர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை சிபிஐயிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர். மேலும் அதுகுறித்து ஒன்றரை மணி நேரம் சிபிஐயிடம் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து 2-வது நாளாக சிபிஐ கேட்ட அனைத்து ஆவணங்களையும் நேற்று காலை 11.15 மணிக்கு கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் ஒப்படைத்துவிட்டு, அதுகுறித்து விளக்கினர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் மதியம் 3.30 மணிக்கு கரூர் சுற்றுலா மாளிகைக்கு சென்ற வழக்கறிஞர் அரசு, குருசரண் உள்ளிட்ட 3 பேரும் சிபிஐக்கு விளக்கங்கள் அளித்த பின் நேற்றிரவு 8.50 மணிக்கு வெளியே வந்தனர்.
இந்நிலையில் இன்று (நவ.10) கரூர் மாவட்டம் க.பரமத்தியில் செயல்படும் மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் இருவர் சிபிஐ விசாரணைக்கு காலை 10 மணிக்கு ஆஜராகினர். அவர்களிடம் மின் விநியோகம், மின் துண்டிப்பு உள்ளிட்டவை தொடர்பான விசாரணை நடைபெற்றது. மேலும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என 6-க்கும் மேற்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.
