‘‘வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வேளச்சேரி மக்கள் இப்போதே பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 2023-ம் ஆண்டு கழுத்தளவு நீரில் தத்தளித்த கொடூரமான நினைவுகள் அவர்களைத் துரத்துவதால், பலர் தங்கள் வீடுகளின் தளங்களை உயர்த்துவது, வாகன நிறுத்துமிடங்களை மேடாக்குவது, ஏன், வீடுகளையே இடித்துப் புதிதாகக் கட்டுவது என லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து வருகின்றனர். “அன்றே ஏரியை தூர்வாரி இருந்திருந்தால், 2023-லேயே வெள்ளம் வந்திருக்காது” என்கிறார் தமிழக பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.ஜி.சூர்யா!

இது தொடர்பாக வேளச்சேரி ஏரியில் இருந்தே விளக்கம் கொடுத்த எஸ்.ஜி.சூர்யா, ‘‘ஒரு காலத்தில் 255 ஏக்கரில் பரந்து விரிந்திருந்த இந்த மாபெரும் நீர்நிலை, இன்று ஆக்கிரமிப்புகளாலும் புறக்கணிப்பாலும் வெறும் 55 ஏக்கராக சுருங்கிவிட்டது. ஏஜிஎஸ் காலனி, வெங்கடேஸ்வரா நகர், இபி காலனி, தண்டீஸ்வரன் நகர், பேபி நகர், அயோத்தி காலனி போன்ற அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு இந்த புறக்கணிக்கப்பட்ட ஏரியே முதன்மைக் காரணமாகும்.
ஏரியின் எல்லைகளை வரையறுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமை தீர்ப்பாயமும் பலமுறை உத்தரவிட்டும், நீர்வளத் துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
குறிப்பாக, கடந்த மார்ச் மாதம், ஜூன் 12-ம் தேதிக்குள் ஏரியை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நீர்வளத் துறைக்கும் வேளச்சேரி தாசில்தாருக்கும் உத்தரவிட்டது. எட்டு மாதங்கள் கடந்த நிலையிலும், ஒன்றும் ஆகவில்லை.
மறுபுறம், உபரி நீர் செல்வதற்கான வடிகால்களும் படுமோசமான நிலையில் உள்ளன. வீராங்கல் ஓடை இணைப்பு வடிகால்கள் வெறும் 3 அடி அகலத்தில், பெரும்பாலும் கழிவுநீரையே கொண்டு செல்கின்றன. வேளச்சேரி ஸ்டேஷன் ரோடு வடிகால்கள், ஒரு குறுகிய தூரத்திற்கு 10 அடி அகலத்தில் இருந்தாலும், சட்டென குறுகிவிடுகின்றன.
“வேளச்சேரி உபரி நீர் மூன்று வழிகளில் வெளியேறுகிறது: ஒன்று, தரமணி பக்கிங்காம் கால்வாய்க்குச் செல்லும் ‘கட்-அண்ட்-கவர்’ வடிகால். இது பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலேயே உள்ளது. இரண்டு, கருவேல மரங்கள் மண்டி, அடைத்துக் கிடக்கும் வீராங்கல் ஓடை. மூன்று, பெருங்குடி-வேளச்சேரி நிலையச் சாலை வடிகால்கள். இவை 30 அடி அகலத்திற்கு இருக்க வேண்டிய இடத்தில், வெறும் 10 அடி அகலத்தில் மட்டுமே உள்ளன,” என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த முக்கிய பிரச்சனைகளில் எல்லாம் அரசு மௌனம் சாதிக்கிறது. இன்னும் ஏரி தூர்வாரப்படவில்லை, இனியாவது தூர்வார வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாஜக-& அதிமுக கூட்டணி ஆட்சியில் வேளச்சேரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மழை நீர் வீட்டிற்குள் புகாத மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று தமிழக அரசுக்கு முன்னெச்சரிக்கையை கொடுத்திருக்கிறார் எஸ்.ஜி.சூர்யா!
